வேதாரண்யம் அருகே நடுக்கடலில் வேதை மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் பறிப்பு-இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி வேதாரண்யம் மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையிலிருந்து விமலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீனவர்கள் குமரிமுத்து (48), அமுதகுமார் (54), ரஞ்சித் (35), அருள்ராஜ் (35), நாகராஜ் (60) ஆகிய 5 பேரும், சிவபாலன் என்பவருக்கு சொந்தமான படகில் சுதாகர் (40), அருள் (38), ஆண்டவர் (40), வேலவன் (45), செல்வமணி (45) ஆகிய 5பேரும், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் சுரேஷ் (41), ராமச்சந்திரன் (43), ஜெகதீசன் (42), அருள் (27) 4மீனவர்கள் என 14 மீனவர்களும் நேற்றுமுன்தினம் 3 படகில் வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது மீனவர்கள் இந்திய எல்லையில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 படகையும் மறித்தனர். பின்னர் படகில் இருந்த இருவர், கத்தியுடன் மூன்று படகிலும் ஏறி மீனவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து வாக்கிடாக்கி ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, செல்போன் பாராசூட் ஆங்கர், டார்ச்லைட், தார்பாய், சிக்னல் லைட், மீன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள், இதுகுறித்து ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தாரிடம் தகவல் தெரிவித்தனர். வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்திலும், மீன்துறை அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.கடலோர காவல் குழும டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார், மீன்துறை அதிகாரிகள், கியூ பிராஞ்ச் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories: