×

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல்!!

டெல்லி : உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது. மாநிலங்களவையில் பிரச்னையை எழுப்பிய திமுக உறுப்பினர் வில்சன், 1992ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறினார். சமூக நீதியை நிலைநாட்ட இப்பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வில்சன் கேட்டுக் கொண்டார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். மருத்துவமனை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் விளக்கம் கோரினார். இதற்கு பதில் அளித்த ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கட்டுமான பணிக்கான கடன் உதவி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக கூறினார். நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்கள் குறித்து பேசிய திருச்சி சிவா, இப்பிரச்சனை கவலை அளிப்பதாக தெரிவித்தார். குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கூறினார். பள்ளிகளில் குழந்தைகள் அதிக நேரத்தை செலவிட்டு வருவதால் அங்கு பாதுகாப்பான சூழல் உருவாக்க வேண்டும் என்றும் திருச்சி சிவா கேட்டுக் கொண்டார். இதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Vimuka ,Parliament ,Madurai AIIMS Hospital , Children, Sex, Assault, Madurai, AIIMS Hospital
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...