×

இயற்கை உரம் கிடைக்க வயல்களில் ஆட்டு மந்தைகளை அடைப்போடும் விவசாயிகள்

சாயல்குடி :  ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் இயற்கை உரத்திற்காக விவசாய நிலங்களில் செம்மறி ஆடு மந்தைகளை அடைப்போட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. கடந்தாண்டு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் ஒரு சில இடங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் நன்றாக விளைந்தது.

நெல், சிறுதானியங்கள் ஜனவரி மாதம் வரை அறுவடை செய்யப்பட்டது. இதனால் விவசாய நிலங்களில் பண்ணை பயிர் கழிவு எனப்படும் தானிய கழிவுகள், அறுவடை செய்த பின் வயலில் எஞ்சியுள்ள பகுதிகள், பயிர்கட்டைகள் போன்ற கழிவுகள் எஞ்சி இருக்கிறது. இதனை கடந்த ஆண்டுகளில் விவசாயிகள் கோடைக்காலத்தில் தீயிட்டு கொளுத்துவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நன்றாக விளைந்து வருவதால் விவசாயிகள் தரிசு நிலங்களை கூட விவசாய நிலங்களாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில் அறுவடை முடிந்த விவசாய நிலத்தில் விவசாய கழிவுகளை அகற்றாமல், தீயிட்டு கொளுத்தாமல் இயற்கை உரத்திற்காக அவற்றில் செம்மறி ஆடு மந்தைகளை அடைய போட்டு வருகின்றனர்.

தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை தற்போது கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, ராமநாதபுரம், பரமக்குடி, நயினார்கோயில், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டு, அந்த ஆடுகளை விவசாய நிலங்களில் அடையப் போடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வயற்காட்டில் அறுவடையின் போது பயிர்கழிவுகள் எஞ்சியிருக்கும். அதன்மேல் செம்மறி ஆடுகளை அடையப்போடுவதால் ஆட்டு கழிவுகள் சேர்ந்து இயற்கை உரமாக மாறிவிடுகிறது. பயிர்கழிவுகள், ஆட்டு கழிவு சேர்ந்த கலவையுடன் கோடை உழவு செய்யும் போது மண் கிளரப்பட்டு இயற்கை உரமாக அமைகிறது.

இதன் தொடர்ச்சியாக பருவமழை காலத்தில் செய்யப்படும் உழவார பணிகளின் போது கிடைக்கும் இயற்கை உரம் பயிர்களுக்கு சிறந்த நுண் உரமாக அமைந்து வேர்ப்பகுதி வலுவுடன், பயிர் செழிப்பாக வளர உதவுகிறது. இதனால் செம்மறி ஆட்டு மந்தை அடையப்போட்டு வருகிறோம். ஒரு நாள் இரவு மட்டும் அடையப்போடுவதற்கு ஆடு ஒன்றிற்கு ரூ.2 முதல் 3 வரை என எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் கொடுக்கப்படுகிறது என்றார்.

சில ஆண்டுகளாக பூச்சிக்கொல்லி மருந்து, செயற்கை உரம் என விவசாய நிலத்தை பாதிக்கக்கூடிய மருந்துகளை பயன்படுத்தி வந்த விவசாயிகள் தற்போது பாரம்பரிய வழக்கப்படி இயற்கை முறையை நாடி வருவது விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sayalgudi: Farmers in Ramanathapuram district are herding sheep and goats on agricultural lands for natural manure.
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது