×

எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்-கலெக்டர் விஷ்ணு வலியுறுத்தல்

நெல்லை :  பொதுமக்கள் இயன்றவரை தங்களது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க  வேண்டும் என நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடந்த மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு வலியுறுத்தினார். நெல்லை  வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி சார்பில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் கிளிட்டஸ்பாபு தலைமை வகித்தார். 2ம் ஆண்டு மாணவி  சகாயரபீனா வரவேற்றார்.  எம்பிஏ 2ம் ஆண்டு மாணவி தீபலட்சுமி, நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலெக்டர் விஷ்ணு, மஞ்சப்பை விநியோகத்தை துவக்கிவைத்துப் பேசுகையில் ‘‘பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது ஒரேநாளில்  நடக்கும் காரியம் அல்ல. ஆனால் ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட முறையில் கொள்கையாக  எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். பொதுமக்கள் இயன்றவரை தங்களது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.  

2050ம் ஆண்டில் கடலில் வாழும் விலங்கினங்களின் எடையை விட கடலில் வீசப்படும்  பிளாஸ்டிக் கழிவு அதிகமாக இருக்கும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே  மாணவர்களாகிய நீங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தமாட்டேன் என உறுதி மொழி எடுத்துக் கொள்வதோடு நிற்காமல்  வாழ்விலும் செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

 நிகழ்ச்சியில்  நிர்வாக இயக்குநர் அருண்பாபு, மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். கல்லூரியின்  என்எஸ்எஸ் சார்பில் சுமார் 10 ஆயிரம் துணிப்பைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வேல்முருகன்  மற்றும் என்எஸ்எஸ் அமைப்பினர் செய்திருந்தனர்.

‘‘நெல்லையில் 44% பஸ்கள் இயக்கம்’’

நெல்லை மாவட்டத்தில் நேற்று 44 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார். இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறுகையில் ‘‘நெல்லை  மாவட்டத்தில் நேற்று காலை முதல் 44 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம்  உள்ள 365 பஸ்களில் 161 பஸ்கள் இயங்கின. பொதுமக்களுக்கு  போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தேவையான பகுதிகளில் பஸ்கள்  இயக்கப்பட்டன. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  

நெல்லையில் நடைபெற்ற பொருநை புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள் நல்லாதரவு வழங்கினர். சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள புத்தகங்கள்  பொதுமக்களால் விரும்பி வாங்கப்பட்டன. சுமார் 3.5 லட்சம் பேர் இக்கண்காட்சியை பார்த்து பயனடைந்தனர். புத்தக வெளியீட்டாளர்களும் மனநிறைவு  கொள்ளும் வகையில் கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கண்காட்சி  நடைபெற்ற வளாகத்தில் முடிந்தவரை நெகிழி பயன்பாடு இல்லாத நிலை  கடைபிடிக்கப்பட்டது’’ என்றார்.

Tags : FX Engineering College ,Vishnu , Nellie: Nellie said the public should avoid the use of plastic products in their daily lives as much as possible
× RELATED செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான்