சேலம் மாவட்டம் ஆத்தூரில் 16 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர், ஓட்டலில் புகுந்ததில் ஒருவர் பலி: போலீசார் விசாரணை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் 16 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் இன்று காலை வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் உணவருந்தி வந்துள்ளனர். அச்சமயம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மினி டிராக்டர் ஒன்று உணவகத்தின் உள்ளே அதிவேகமாக புகுந்துள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட்டலின் பரோட்டா மாஸ்டர் மருது மற்றும் அருகாமையில் இறைச்சி கடை நடத்தி வந்த ஆறுமுகம் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் எதிர்ப்பாராத விதமாக இறைச்சி கடை நடத்தி வந்த ஆறுமுகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

பரோட்டா மாஸ்டர் மருதுவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான டிராக்டரை ஓட்டியது 16 வயது சிறுவன் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சிறுவனிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக சிறுவர்கள் பலர் மினி டிராக்டர்கள் ஓட்டி வருவதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இதுபோன்ற செயல்களில் சிறுவர்கள் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Related Stories: