×

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை, நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள வழக்கில், தனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

11 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடுமென தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் எனவே 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார்.

அவ்வாறு செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் சீயான்61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாளை மறுதினம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Tags : Sivakarthikeyan ,Gnanavelaraja ,Chennai High Court , Actor Sivakarthikeyan has filed a case against producer Gnanavelaraja in the Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...