×

ஏனம்பாக்கம் கிராமத்தில் புதர் மண்டி கிடக்கும் ஊராட்சி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஏனம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்து பயன்பாடில்லாமல் புதர்மண்டி கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் ஊராட்சியில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என  500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி  உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்ட வேண்டும்.ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த கட்டிடம் கடந்த 10 வருடங்களாக சேதம் அடைந்து மழை காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்தது. மேலும், கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்பட்டது. இதனால், இதை யாருமே பயன்படுத்தவில்லை.

இந்நிலையில், ஏனம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில்தான் ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. பழைய கட்டிடத்தில், தற்போது ஆடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே, பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஏனம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் ஆகியவை நடைபெறும். ஊராட்சி மன்ற கூட்டம் இ-சேவை மையத்தில் தான் செயல்பட்டு வருகிறது. பழைய கட்டிடம் பழுதடைந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இது குறித்து பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் மற்றும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழைய ஊராட்சி கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய ஊராட்சி கட்டிடம் கட்ட வேண்டும்’ என்றனர்.




Tags : Shrub ,Mandi ,Enambakam Village , In the village of Anambakkam Budar Mandi Panchayat Office: New building request
× RELATED மண்டி தொகுதி பாஜக வேட்பாளரான நடிகை...