வாலாஜாபாத் ரயில் நிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் அரசு நூலகம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில், வாலாஜாபாத் ரயில் நிலையம் அருகே, அரசு நூலகம் அமைந்துள்ளது. கடந்த 1972ம் ஆண்டு முதல் இந்த நூலகம் செயல்படுகிறது. இங்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில், தற்போது ஆங்காங்கே  சிதலமடைந்து, மேல்பகுதியில் செடிகொடிகள் வளர்ந்து, சுற்றுச்சுவர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் லாரி, பஸ் உள்பட பல்வேறு வாகனங்களால் ஏற்படும்   புழுதியால்,  வாசகர்கள் மிகவும் அவதியடைகின்றனர். இதனால்,சுவாச கோளாறு உள்பட பல நோய்கள் உண்டாகும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, வாசகர்கள் கூறுகையில், இந்த நூலகத்திற்கு தினமும்  குழந்தைகள், முதியவர்கள், ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த நூலகம் சாலையைவிட, தாழ்வாக அமைந்துள்ளது. இதனால், ஜன்னல் வழியாக உள்ளே வரும் தூசு மற்றும் புழுதியால் வாசகர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

மேலும்,  நூலக கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து  விழும் அபாய நிலையில் உள்ளது. இதையொட்டி, இங்கு வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் அல்லது அருகில் உள்ள பழைய பேரூராட்சி அலுவலக கட்டிடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால்,  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன், எம்எல்ஏ மற்றும் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: