×

கீழ்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை 1 மாதத்தில் அகற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மேல்மருவத்தூரில் உள்ள கீழ்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள கீழ் மருவத்தூர் ஏரி கடந்த 2015ம் ஆண்டு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை  விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 201ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும்  இது வரை எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை என்று  தெரிவிக்கப்பட்டது. வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  தமிழக அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவகிறது என்று தெரிவித்தார். இதனை பதிவுசெய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பை ஒரு மாதத்தில் அகற்றி, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : High Court ,Lower Maruvathur Lake , In the Lower Maruvathur Lake High Court orders state to remove occupation within 1 month
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்...