×

தேசிய பங்கு சந்தை முறைகேடு தடுக்க என்ன நடவடிக்கை?.:மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி கேள்வி

புதுடெல்லி: ‘தேசிய பங்கு சந்தை முறைகேட்டை தடுக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன’ என்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். தேசிய பங்கு சந்தையில் நிகழ்ந்த மோசடி மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்க ஒன்றிய நிதி அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். அதன் விவரங்கள் பின்வருமாறு:

* தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி தனியார் நிறுவனத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ சட்டவிரோதமாக தரவுகளை பகிர்ந்துள்ளாரா?
* எனில் எந்தெந்த தனியார் நிறுவனங்களுக்கு அல்லது தனி நபர்களுக்கு தரவுகள் பகிரப்பட்டுள்ளது என்ற விவரங்களை தெரியப்படுத்தவும்.
* இதுகுறித்து 2018ம் ஆண்டே புகார் பதிவாகி வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2022ம் ஆண்டான தற்போது தான் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இத்தனை வருட காலதாமதத்திற்கு என்ன காரணம் என்பதை தெரியப்படுத்தவும்.
* தேசிய பங்கு சந்தையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்வாக உள்ளதா மற்றும் எதிர்காலத்தில் சைபர் தாக்குதல் போன்ற பெரிய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகுமா?
* வர்த்தக தளங்களின் பாதுகாப்பை கடினப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா எனவும், எனில் சம்பந்தப்பட்ட நபர்கள் உட்பட முக்கிய தகவல்களின் கசிவை கண்டறியும் இணையப் பாதுகாப்பு குழுக்களின் விவரங்களுடன் தெரியப்படுத்தவும்.
* தேசிய  பங்கு சந்தையில் கண்டறிப்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் மீது ஒன்றிய அரசு/ செபி எடுத்த நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.
* எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க தேசிய பங்கு சந்தை மற்றும் ரிசர்வ் வங்கி பட்டியலில் உள்ள அந்நிய செலாவணி குறித்து மதிப்பாய்வு செய்யப்படுமா எனவும், எனில் இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
இவ்வாறு தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.



Tags : National Stock Exchange ,Dayanidhimaran ,Lok Sabha , National stock market abuse What action to prevent?.: Dayanidhimaran MP question in the Lok Sabha
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...