×

94வது ஆஸ்கர் விருது விழா சிறந்த நடிகராக வில் ஸ்மித் தேர்வு: 6 விருதுகளை வென்றது டியூன் ஹாலிவுட் படம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: 94வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது.வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறை.சிறந்த திரைப்படமாக ‘கோடா’ ஹாலிவுட் படம் தேர்வு செய்யப்பட்டது. காமெடி டிராமா கதை படமிது. 2014ல் வெளியான ‘ஃபெமிலே பெலியர்’ பிரெஞ்சு படத்தின் ரீமேக்தான் இந்த படம். சிறந்த நடிகராக ‘கிங் ரிச்சர்ட்’ படத்துக்காக வில் ஸ்மித் தேர்வானார். சிறந்த நடிகைக்கான விருதை ஜெசிகா சாஸ்டெயின் வென்றார். ‘தி ஐஸ் ஆஃப் டாமி ஃபெ’ படத்துக்காக அவர் இந்த விருதை பெற்றார். ‘தி பவர் ஆஃப் தி டாக்’ படத்துக்காக பெண் இயக்குனரான ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார்.

‘கோடா’ படத்தில் நடித்த ட்ராய் கோட்சூர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றனர். ட்ராய் கோட்சூர், காது கேளாத நடிகர் ஆவார். டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான ‘டியூன்’ திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது.ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வாசகங்கள் திரையிடப்பட்டன. முன்னதாக இந்த விழாவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி காட்சி வாயிலாக தோன்றி பேசுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், அதற்கு பதிலாக, திரையில் இடம்பெற்ற வாசகங்களில் ‘மோதல் காலங்களில் நமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த திரைப்படம் ஒரு முக்கியமான வழியாகும், உண்மையில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் உக்ரைனில் உணவு, மருத்துவ பராமரிப்பு, சுத்தமான நீர் மற்றும் அவசர சேவைகளின் தேவைக்காக காத்திருக்கின்றன’ என்று கூறப்பட்டிருந்தது.ஹாலிவுட்டின் ‘காட்பாதர்’ படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி இந்த படக் குழுவினர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். படத்தின் இயக்குனர் ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்பொல்லா மற்றும் படக்குழுவினர் மேடைக்கு வந்தனர். அவர்களை விழா குழுவினர் கவுரவித்தனர். இந்திய ஆவணப் படமான ‘ரைட்டிங் வித் ஃபயர்’ சிறந்த ஆவணப் பட போட்டியில் இருந்தது. ஆனால் அதற்கு விருது கிடைக்கவில்லை.

டியூன் படக் கதை என்ன?
டெனிஸ் வில்லிநியூவ் இயக்கத்தில் டிமோதீ சலாமெட், ரெபேக்கா ஃபெர்கியூசன், ஆஸ்கர் ஐசாக், ஜோஷ் பிரோலின், ஸ்டெல்லன் ஸ்கார்ஷ்கார்ட், தேவ் பவுதிஸ்தா உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘டியூன்’. இப்படம் 1965ல் வெளியான புகழ்பெற்ற ஃபிரான்க் ஹெர்பெர்ட் எழுதிய  ’டியூன்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டப் படம். கிரகங்களுக்கு இடையே நடக்கும் போர்தான் படக்கதை. ஸ்பைஸ் என்னும் ஒரு மூலப்பொருள் கிடைக்கும் பாலைவன கிரகம். இந்த ஸ்பைஸ் மூலப்பொருளைக் கொண்டுதான் கிரகங்களுக்கு கிரகம் பயணம் செய்யமுடியும். எரிபொருளாக மட்டும் இல்லாமல் , அந்த ஸ்பைஸ் மூலம் ஏகப்பட்ட பயன்கள் உயிரினங்களுக்குக் கிடைக்கும். இந்த ஸ்பைஸ்க்காக அட்ரேய்ட்ஸ், மற்றும் அராக்கிஸ் ஆகிய இரு கிரக வாசிகளுக்கு இடையே நடக்கும் போர்தான் டியூன் படக் கதை. விஷுவலாக இந்த படம் மிரட்டியிருந்தது.

மனைவியை கிண்டலடித்த நடிகருக்கு வில் ஸ்மித் பளார்
கிறிஸ் ராக் அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ட்அப் காமெடியன். சிறந்த ஆவணப்பட விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்ட கிறிஸ் ராக், மேடையில் அமர்ந்திருந்த பிரபலங்களை மையப்படுத்தி நகைச்சுவையாக பேசத் தொடங்கினார். பேச்சுக்கு இடையில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கட் ஸ்மித் குறித்து கிறிஸ் ராக் பேசினார். ஜடா, அலேபெசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் அவரது தலைமுடி உதிர்ந்து காணப்படுகிறது. கீ ஜென் ஹாலிவுட் படத்தில் பெண் ராணுவ வீராங்கனையின் தோற்றம் தலைமுடியற்று வடிவமைக்கப்பட்டிருக்கும். வில் ஸ்மித் மனைவி ஜடாவை கீ ஜென் படத்துடன் ஒப்பிட்டு கிறிஸ் ராக் பேசியது வில் ஸ்மித்தை கோபப்படச் செய்தது.

‘ஜடா, கீஜென் பார்ட் 2வுக்கு காத்திருப்பதுபோல தெரிவதாக கிறிஸ் சொன்னதும் வில் ஸ்மித் மேடையேறிச் சென்று அவரை பளார் என அறைந்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே வில் ஸ்மித், ‘என்னுடைய மனைவியின் பெயரை உன் வாயில் இருந்து சொல்லாதே’ என இரு முறை சத்தமாக கூறினார். இது ஜோக்தான் என கிறிஸ் ராக் கூறுகிறார். ஆனால் கோபத்துடன் அங்கிருந்து செல்லும் வில் ஸ்மித்தை மேடையிலிருந்து இறங்கியதும் விழா குழுவில் சிலர் சமாதானம் செய்கின்றனர். அப்போது வில் ஸ்மித் கண் கலங்கினார். அதன் பிறகே சிறந்த நடிகருக்கான விருதுக்கு அவர் அழைக்கப்பட்டார். அப்போது பார்வையாளர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.



Tags : Will Smith ,94th Academy Awards ,Hollywood ,Film , 94th Oscar Awards Ceremony Will Smith nominated for Best Actor: Tune Hollywood Film Wins 6 Awards
× RELATED எனக்கு 70 வயது ஆகிவிட்டதா? ஜாக்கி சான் அதிர்ச்சி