×

நாட்டை இரண்டாக உடைக்கும் முயற்சியின் எதிரொலி கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா கவனம்: இரு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை சாத்தியமா?

கீவ்: உக்ரைனின் கடுமையான எதிர் தாக்குதலால், அந்நாட்டை இரண்டாக உடைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதற்காக கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்ற ரஷ்ய ராணுவம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, கடந்த மாதம் 24ம் தேதி அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. 33 நாட்களாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிய நிலையில், மரியுபோல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களை சர்வ நாசம் செய்துள்ளது. கார்கிவ், லிவிவ் நகரங்களில் தொடர்ந்து போர் நடக்கும் நிலையில், உக்ரைன் ராணுவம் சரணடையாமல் கடுமையான பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

இதை உணர்ந்து கொண்ட ரஷ்யா, வடகொரியா, தென் கொரியா போல உக்ரைனை இரண்டாக உடைக்க திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் உளவுத்துறை தளபதி நேற்று முன்தினம் தெரிவித்தார். அதாவது மேற்கு உக்ரைன், கிழக்கு உக்ரைனை தனித்தனியாக உடைப்பதே ரஷ்யாவின் தற்போதைய திட்டம்.கிழக்கு உக்ரைனில் ஏற்கனவே டான்பாஸ் பிராந்தியத்தின் டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகிய நகரங்களை கிளர்ச்சிப்படை மூலம் ரஷ்யா வசம் உள்ளது. எனவே கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்ற அப்பகுதியில் தற்போது ரஷ்ய படைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.அதே சமயம், கார்கிவ், கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது வான்வழி தாக்குதலை ரஷ்ய ராணுவம் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, துருக்கியின் இஸ்தான்புல்லில் ரஷ்யா, உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த நேற்று திட்டமிட்டிருந்தனர். கடைசி நேரத்தில் அந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும், இப்பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நிச்சயம் நடக்கும் என உக்ரைன் உறுதி செய்துள்ளது.பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புடின் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரும் நேரடியாக ஆலோசிப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ஆனால் புடின்-ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இப்போதைக்கு தயாராக இல்லை. முக்கியமான சில விஷயங்களுக்கு உக்ரைன் உட்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கூறி உள்ளார். இதனால் இப்பேச்சுவார்த்தை உக்ரைன் விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ரஷ்ய பீரங்கி அணிவகுப்பை தகர்த்த உக்ரைன் டிரோன்கள்
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற, அந்நகரை நோக்கி சுமார் 60 கிமீ தூரத்திற்கு ரஷ்ய பீரங்கிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தின் சிறப்பு பயிற்சி பெற்ற 30 வீரர்களைக் கொண்ட டிரோன் படை, ரஷ்ய பீரங்கி அணிவகுப்பை தாக்கி தகர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரவில் ஏவப்பட்ட டிரோன்கள் மூலம் ரஷ்ய பீரங்கிகள் பல அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறி உள்ளது.

இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலை. அழைப்பு
உக்ரைனில் மருத்துவம் படித்து போரினால் தாய் நாடு திரும்பியுள்ள இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரலாம் என ரஷ்யா அழைப்புவிடுத்துள்ளது. மாணவர்கள் நடப்பாண்டிற்கான கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தனி நுழைவுத்தேர்வுகள் தேவையில்லை என்றும் ரஷ்ய பல்கலைகழகங்கள் உறுதியளித்துள்ளன. உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு சுமார் 16 ஆயிரம் மாணவர்கள் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது விழாவில் உக்ரைனுக்கு ஆதரவு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் - 2022 விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாரம்பரியமிக்க சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்ற கலைஞர்களில் பெரும்பாலானோர் உக்ரைன் நாட்டு கொடியை தங்களது அங்கியில் இடம் பெற செய்திருந்தனர். சிலர் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு ஆதரவாக நீல நிறத்திலான ரிப்பனை அணிந்து வந்திருந்தனர். மேலும், விழா அரங்கின் பிரமாண்ட திரையில் உக்ரைனுக்கு ஆதரவான செய்தி இடம் பெற்றது. அதில், ‘உக்ரைனை உங்களால் முடிந்த விதத்தில் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உக்ரைனில் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு உணவு, மருத்துவம், சுத்தமான நீர் மற்றும் அவசர சேவைகள் தேவை. நாம் கூட்டாக, உலகளாவிய சமூகமாக முடிந்த உதவிகளை செய்வோம்’ என கூறப்பட்டது.



Tags : Russia ,eastern Ukraine , Echo of the attempt to divide the country in two Russia's focus on eastern Ukraine: Is it possible for the two presidents to negotiate?
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...