குருசுமலை திருப்பயண விழா துவங்கியது: நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் கொடியேற்றினார்

அருமனை: பத்துகாணி குருசுமலை திருப்பயண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் கொடியேற்றினார். குமரி- கேரள எல்லை பகுதியில் பத்துகாணியில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருப்பயண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக மதியம் 2 மணிக்கு குருசுமலை அடிவாரத்தில் இளைஞர்கள் சார்பில் பரிகார சிலுவை பாதை நடைபெற்றது. நிகழ்ச்சியை அருட்பணியாளர் ஜோயி ஷாபு தொடங்கி வைத்தார். மாலை 4 மணிக்கு புனித பத்தாம் பியூஸ் தேவாலயத்தில் இருந்து திருக்கொடி பயணம் தொடங்கி மாலை அடிவாரத்தை வந்தடைந்தது. தொடர்ந்து திருவிழா கொடியை நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் ஏற்றி வைத்தார்.

பின்னர் திவ்ய ஜோதி கொடி பயணம் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை நடந்தது. இதற்கு அருட்பணியாளர் கிறிஸ்து தலைமை வகித்தார். மாலை 5 மணிக்கு ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மலை உச்சியில் திருவிழா கொடியை அருட்பணியாளர் கிறிஸ்து ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். மாலையில் நடந்த திருவிழா பொதுகூட்டத்திற்கு ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை வகித்தார்.

குருசுமலை இயக்குனர் வின்சென்ட் வரவேற்று பேசினார். விழாவில் கேரள மாநில எதிர்கட்சி தலைவர் சதீஷன், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், எம்எல்ஏக்கள் ஹரீந்திரன், ஆன்சலன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி ஏராளமானோர் மலையேறி சென்று வழிபாடு நடத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு தமிழக, கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: