×

திருச்சி திருவானைக்காவலில் பங்குனி தேரோட்ட விழா: எட்டுதிக்கு கொடியேற்றம்

திருச்சி: பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா  கடந்த மாதம் 11ம்  தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வரும் ஏப்ரல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. பங்குனி தேரோட்டம் வரும் 2ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.15 மணியளவில் கொடிமரம் அருகே வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது கோயில் யானை அகிலா கொடிமரங்களுக்கு மரியாதை செலுத்தியது.

இரவு சோமாஸ்கந்தர், அம்மன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை (29ம்தேதி) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், நாளை மறுதினம் (30ம் தேதி) இரவு பூதவாகனம், காமதேனு வாகனத்திலும், 31ம் தேதி  கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 1ம் தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 2ம் தேதி நடைபெறுகிறது.

3ம் தேதி சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்திலும், 4ம் தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 5ம் அதிகாரநந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும், 6ம் தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏப்ரல் 16ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 17ம் தேதி சாயாஅபிஷேகம், 18ம் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Tags : Panguni Theory Festival ,Trichy Thiruvanikawal ,Eututi , Panguni Election Ceremony at Trichy Thiruvanaikaval: Flag hoisting at 8 p.m.
× RELATED மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு