×

வடசென்னை ஓட்டல்களில் காலாவதி இறைச்சியில் உணவு: அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதியில் பிரபல தனியார் ஓட்டல்களில், குப்பைக்கு போகும் காலாவதி எலும்புகள், இறைச்சிகள் சமைக்கப்பட்ட உணவுகளுடன் பரிமாறப்படுவதால் அசைவ பிரியர்கள் பெரிதும் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் தொண்டு நிறுவனத்தினர் 32 ஏழை குழந்தைகளுடன் சூரியநாராயண தெருவில் உள்ள உணவகத்தின் கிளைக்கு சாப்பிட வந்துள்ளனர். அவர்களுக்கு வழங்கிய பொறித்த மீன் உணவில் துர்நாற்றம் வீசியது.

ஓட்டல் நிர்வாகத்திடம் மாற்று உணவு வழங்கும்படி தனியார் தொண்டு நிறுவனத்தினர் வலியுறுத்தினர். எனினும், அந்த மீன் உணவை 32 குழந்தைகளும் சாப்பிட்டதால், அக்குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறு ஏற்படுமோ என தனியார் தொண்டு நிறுவனத்தினர் அச்சமடைந்தனர். இதுபோன்று பல்வேறு புகார்களின் பேரில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ராயபுரத்தில் உள்ள பிரபல அசைவ உணவகத்தின் 3 கிளைகளிலும் சென்னை மாநகர உணவு பாதுகாப்பு துறை இயக்குனர் சதீஷ்குமார் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு சமையலறையில் கெட்டு போன மீன்கள், குப்பையில் கொட்டப்பட்ட எலும்புகள், காலாவதி இறைச்கிகள் உணவுக்கு பயன்படுத்தப்பட்டது சோதனையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காலாவதியான மீன், ஆடு, கோழிக்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் சிமெட்ரி சாலை, திருவொற்றியூர், தண்டையார்பேட்டையில் உள்ள அசைவ உணவகத்தின் கிளைகளிலும் தரமற்ற, கெட்டு போன அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்தது.

சம்பந்தபட்ட ஓட்டல் நிர்வாகத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த அசைவ உணவு பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Tags : North Chennai Seals ,Aveyava , Expired meat food in North Chennai hotels: Non-vegetarians shocked
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100