×

வேலூர் மாநகராட்சி சர்க்கார் தோப்பு பகுதியில் ₹100 கோடியில் சோலார் பேனல் அமைத்ததில் விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்படும்-நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கி வைத்து அமைச்சர் பேச்சு

வேலூர் : விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் சோலார் பேனல் திட்டத்துக்கு ₹100 கோடி செலவிட்டது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று மாநகராட்சி 1வது மண்டலம் திருநகரில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறினார்.கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத்திட்டத்தை போன்று நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்து, தற்போது அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம் காட்பாடி திருநகரில் நகர்புற வேலைவாய்ப்பு திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது.

கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்பி கதிர்ஆனந்த், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிஷனர் அசோக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

7, 8 ஆண்டுகளாக மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாமல் காட்டுராஜா ஆட்சி போல அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர். எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு செலவிடப்பட்டது தெரியாது. தொகுதி எம்எல்ஏவான எனக்கே அது தெரியாது. உதாரணத்துக்கு விருதம்பட்டு பாலாற்றங்கரையில் உள்ள சர்க்கார் தோப்பு பகுதியில் ₹100 கோடி சோலார்பேனலுக்காக செலவிடப்பட்டுள்ளது. அங்கு எந்த பணி நடந்தது என்றே தெரியவில்லை. விரைவில் இதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்படும். அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது துரைமுருகன் தொகுதி. இங்கு என்ன நடந்தாலும் எனக்கு தகவல் வந்துவிடும்.

அதனால்தான் நான் தொடர்ந்து இங்கு ஜெயித்து வருகிறேன். ஆகவே அதிகாரிகள் அரசு திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எதுவானாலும் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற மக்களுக்காக இத்திட்டத்தை செயல்படுத்தி ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது.
அதுபோன்று நகர்புற அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசால் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இங்கு 4,200 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். அவர்கள் தொடர்பான பட்டியல் மேயர், கவுன்சிலர்களுக்கு தெரிய வேண்டும். இங்கு ஒரு சமுதாய கூடம் தனியார் பிடியில் உள்ளது. அது யாராக இருந்தாலும் வரும் 10ம் தேதி நான் வருவேன். அதற்குள் அந்த சமுதாய கூடம் மீட்கப்பட்டிருக்க வேண்டும்.நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பூங்காக்கள், சாலையோரங்களில் வேம்பு உட்பட பயனுள்ள மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் மரக்கன்று நட்டார்.இந்நிகழ்ச்சியில் மண்டல உதவி ஆணையர், மண்டலம் 1ல் அடங்கிய 15 வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vellore Corporation ,Sarkar Thoppu ,Minister , Vellore: A commission of inquiry will be set up into the spending of ₹ 100 crore on a solar panel project in Viruthampattu Sarkar Thoppu area.
× RELATED 2012ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய...