ஓசூர் வனக்கோட்டத்தில் 2ம் கட்ட கணக்கெடுப்பு 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டுபிடிப்பு-அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை

ஓசூர் : ஓசூர் வனக்கோட்டத்தில் 2022ம் ஆண்டிற்கான 2ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அரிய வகை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 ச.கி.மீ ஆகும். இதில், காவிரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 504.33 ச.கி.மீ அடங்கும். இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும், 172 வகையான வண்ணத்துப்பூச்சிகளும் காணப்படுகின்றன. ஓசூர் வனக்கோட்டமானது காவிரி, சின்னாறு, தென்பெண்ணை மற்றும் தொட்டஹல்லா ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக அமைந்துள்ளது.

இக்கோட்டத்தில் இயற்கையாக உள்ள நீர்நிலைகள் மற்றும் காப்புக்காட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் போன்றவற்றில் பல்வேறு வகை பறவை இனங்கள் வசித்து வருகின்றன. நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் மூலம் 3 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக கழிமுக துவாரப் பகுதிகளிலும், 2ம் கட்டமாக காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப்பகுதிகளிலும், 3ம் கட்டமாக காப்புக்காடுகளில் உள்ள ஈர நிலப்பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி, காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கே.ஆர்.பி டேம், கெலவரப்பள்ளி டேம், தளி ஏரி உள்ளிட்ட 25 நீர் நிலைகளில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில், 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட்டது. நேற்று 27ம் தேதி கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், ஓசூர் வனக்கோட்டம் காவிரி வடக்கு வன உயிரின சரணாலய பகுதிகளிலும், காவிரி, சின்னாறு நீர்பிடிப்பு பகுதிகளான உரிகம் மற்றும் அஞ்செட்டி வளச்சரகங்களில் 15 பீட்களில் உள்ள காப்புக்காடுகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதற்காக, வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தான பயிற்சி ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டது.

ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், ஓசூர் வனக்கோட்ட வனச்சரக அலுவலர்கள், பிரகாஷ், வன கால்நடை உதவி மருத்துவர் சஞ்சீவ்குமார்,  ஆகியோர் கலந்து கொண்டனர். பறவைகள் கணக்கெடுப்பு குறித்து ஜார்ஜ் மற்றும் சூர்யா, கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் விவரித்தனர்.

நேற்று நடைபெற்ற பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் சுமார் 50க்கும் அதிகமான வன அலுவலர்கள், வனப்பணியாளர்கள், 50 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இப்பணியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதிலும் இரு பாலரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குழுவிலும் வன பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பறவைகள் பற்றி முன் அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டனர். இக்கணக்கெடுப்பு பணியின்போது, தொலைநோக்கு கருவி, கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி, ஏசியன் பேரடைஸ் ஃப்லை கேட்சர், மயில்கள், புதர் காடைகள், கள்ளிப்புறா, வெண் கன்ன குக்குறுவான், நீல பைங்கிளி, கருந்தலை மாங்குயில், சின்னான், கருஞ்சிட்டு, ஊதா தேன்சிட்டு மற்றும் கழுகு இனங்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடையாளம் கணப்பட்டுள்ளது.

Related Stories: