×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*அடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் கார்ன்ஃப்ளெக்ஸ் தூள் சிறிது போட்டு கலக்கி அடை வார்த்தால் அடை மாவு சேர்ந்தாற்போல் ஆவதுடன் அடையும் மிருதுவாக இருக்கும்.

*ரவையை உப்புப் போட்டுப் பிசறி வைத்து விட்டு அதனுடன் உளுந்தை அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் தோசை பேப்பர் ரோஸ்ட் போல வரும்.

*தேங்காய் பர்பி செய்யும்போது வேர்க்கடலைத் தோலை நீக்கிவிட்டு இரண்டாக உடைத்து நெய்யில் வறுத்துப் போட்டால் நன்றாக இருக்கும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

*தக்காளி குருமா, ரசம், கிரேவி போன்றவற்றைத் தயாரிக்க தக்காளி விழுதுக்கு மிக்ஸியை பயன்படுத்தாமல் கேரட் துருவியைக் கொண்டு தக்காளியை மெதுவாகத் தேயுங்கள். விழுதுகள் எளிதாகக் கிடைத்துவிடும். தோலையும் தூக்கி எறிந்து விடலாம்.

*ஒரு எலுமிச்சம்பழத்துண்டால் கையை நன்கு துடைத்துவிட்டால் வெங்காயம் நறுக்கிய பிறகு வரும் வாடை போய் விடும்.

*மைதா, கோதுமை அரிசி மாவுகளைத் தண்ணீர் விட்டு கரைக்கும்போது கட்டி கட்டியாகி விடும். இதற்கு மாவை பாத்திரத்தில் போட்டு அதன்மேல் தண்ணீரைப் பரவலாக விட்டு உடனே கலக்காமல் அப்படியே விட்டு வையுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து கலக்கினால் மாவு கட்டியில்லாமல் கரைந்து விடும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

*மீன் குழம்பை ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் மல்லியும், சிறிய வெங்காயமும் சேர்க்கக் கூடாது.

*வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி, வெயிலில் கொஞ்ச நேரம் வைத்து, பிறகு முறத்தில் போட்டுப்புடைத்தால் தோல் எளிதில் நீங்கிவிடும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

*பண்டிகை நாட்களில் செய்யும் சுண்டல் மீந்துவிட்டால், அதை மசாலா சாதமாகச் செய்யலாம். ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி, இரண்டு பல் பூண்டு, நான்கு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் கரம் மசாலாத்தூள் இவற்றுடன் சேர்த்து வதக்கி, உதிரியாக வடித்த சாதத்துடன் கலந்து, சுண்டலையும் சேர்த்தால் சுவையான மசாலா சாதம் கிடைக்கும்.
- வத்சலா சதாசிவன், சென்னை.

*வெண்டைக்காயை வதக்கும்போது, சிறிது எலுமிச்சைச் சாறு விட்டு, வதக்கினால் மொறு மொறுப்புடன் இருக்கும்.

*கீரையை மசிக்கும்போது, அதனுடன் உருளைக்கிழங்கு ஒன்றை தோல் சீவி, சிறு துண்டுகளாக வேக விட்டு மசித்தால் ருசியாய் இருக்கும்.
- இல.வள்ளிமயில், மதுரை.

*காய்கள் இல்லாத வத்தக்குழம்பு செய்யப் போகிறீர்களா? குழம்பை இறக்குவதற்கு முன் விருப்பமான வற்றலை எண்ணெயில் பொரித்துப் போடவும். வாசனையாக இருக்கும். வற்றலைப் போட்ட பின் குழம்பைக் கொதிக்க வைக்கக் கூடாது.

*எந்தக் காய்கறியில் பால் கூட்டு செய்வதாக இருந்தாலும் கூட்டு கொதித்து இறக்கும்போது, சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து, லேசாக கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். தேங்காய்ப்பால் சேர்த்தபிறகு, அதிக நேரம் கொதிக்கவிட்டால் பால் திரிந்துபோய் சுவை மாறிவிடும்.

*சாம்பாருக்கு பழைய புளியைப் பயன்படுத்தினால் குழம்பு கருப்பாகி விடும். அரிசி களைந்த தண்ணீரில் பழைய புளியைக் கரைத்துப் பயன்படுத்தினால் கருப்பு நிறம் காணாமல் போய், புதுப்புளிக்கரைசல் போலவே ஆகிவிடும்.
- கவிதா சரவணன், ரங்கம்.

*வாரம் ஒருமுறை மிக்சி கப்பில் வெந்நீர் விட்டுக்கழுவி வெயிலில் காய வைத்தால் மசாலா வாடை போய்விடும்.

*சிலிண்டரை மாற்றும்போது அதன் அடியில் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் அண்டாது.
- க.நாகமுத்து, திண்டுக்கல்.

*பனீர் தயாரிக்க கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாற்றுக்குப் பதிலாக தயிர் சேர்த்தால் கூடுதலாக பனீர் கிடைக்கும்.

*கேசரி செய்யும்போது கடைசியில் கொஞ்சம் வறுத்த கடலை மாவைப் போட்டுக் கிண்டி செய்தால் சேர்ந்தாற்போல் இருப்பதுடன்  ‘அசோகா’வின் டேஸ்ட் கிடைக்கும்.
- ஜி.சரஸ்வதி, திருச்சி.

*ரவா தோசை மாவில் நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் விட்டு தோசை வார்த்தால் தோசை நன்றாக மொறு மொறுவென்று இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் தேங்காய்ப்பாலைச் சேர்த்துப் பிசைந்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
- ஆர். மகாலட்சுமி, சென்னை.

*தோசை சுடும்போது கல்லில் கொஞ்சம் பெருங்காயப்பொடி போட்டு, எண்ணெய் விட்டுக் கல் முழுவதும் தேய்த்து பிறகு தோசை வார்த்தால், எடுக்க பக்குவமாக வருவதுடன் நல்ல மணமாகவும் இருக்கும்.

*கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்துவிட்டால் சீக்கிரம் ஊசிப்போகாது.

*பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் அதிக நேரம் நமத்துப் போகாமலிருக்கும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*வெங்காயம், தக்காளி, பூண்டு அரைத்து விழுதாக்கி சப்பாத்தி மாவுடன் சேர்த்துப் பிசைந்து மசாலா சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.

*கிழங்குகளை உப்பு கரைத்த நீரில் 10 நிமிடம் ஊற வைத்தால் பிறகு வேக வைக்கும்போது நன்றாக வேகும்.

*ரஸ்கை பொடி செய்து பாலில் கரைத்துக்கொள்ளவும். சர்க்கரையைக் கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி கரைத்த ரஸ்க்கை போட்டு கிளறவும். நெய், கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறினால் ரஸ்க் அல்வா தயார்!
- கே.ஆர்.இரவீந்திரன், சென்னை.

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!