×

நெய்வேலியில் சுரங்கம் அமைக்க ஒரு கைப்பிடி மண் கூட தரமாட்டோம்: அன்புமணி பேச்சு

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கம் திட்டப் பணிகளை தடுக்க வலியுறுத்தி 26 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தில் நடந்தது. பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டு, மக்கள் குறைகளை கேட்டறிந்து  பேசியதாவது: கம்மாபுரம், புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சிகளில் மூன்றாம் சுரங்கம் அமைக்கும் திட்டம் மிகமோசமான திட்டம். தற்போது வயல்களில் காய்கறிகள், பூக்கள், நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த திட்டத்தால் ஏக்கருக்கு 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு வருவாய் ஈட்டும் விவசாயிகளின் முழு வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

மேலும், கடந்த காலங்களில் என்எல்சி வளர்ச்சிக்காக நிலம், வீடுகளை வழங்கிய விவசாயிகளுக்கு, இந்நிறுவனம் வேலை வழங்கவில்லை‌. உரிய இழப்பீடு தொகையும் வழங்கப்படவில்லை. தற்போது 300 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 15 பேர் மட்டுமே. மீதமுள்ளவர்கள் முழுவதும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். என்எல்சி நிறுவனம் ஆண்டுக்கு 11,500 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்கள். வட மாநிலத்தவர் வாழ வேலை வழங்க செய்துள்ளனர். மோசமான என்எல்சி நிறுவனத்துக்கு, ஒரு கைப்பிடி மண் கூட தரமாட்டோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Neyveli , We will not even give a handful of soil to set up a tunnel in Neyveli: Anbumani talk
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் காரில் சோதனை