ஸ்டிரைக்கில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: இன்றும், நாளையும் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் இன்றும், நாளையும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதில் போக்குவரத்து, மின்துறை, வங்கி, காப்பீடு துறை பணியாளர்கள் என 20 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசை பொறுத்தவரையில், வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில் போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்திருப்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. தங்கள் உரிமைகளுக்காக போராடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வது எந்த வகையில் நியாயம். எனவே, இன்றும், நாளையும்  உரிமைக்காக போராட்டம் நடத்த உள்ள ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: