செங்கல்பட்டில் பல்வேறு துறைகள் சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவளத்தில் அமைந்துள்ள ப்ளூ பீச் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்து ப்ளூ பீச்சில் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்த்திடவும் இப்பகுதிக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், மேலும் ப்ளூ பீச்ல் மரக்கன்றுகளை வளர்த்திடும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து,  செம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் பார்வையிட்டு அங்கு வசிக்கும்  மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தண்டரை ஊராட்சியில் அமைந்துள்ள புல்லேரி  மூலிகைப் பண்ணையில் பயிர் செய்யப்பட்டுள்ள வல்லாரை, கீழாநெல்லி, தும்பை, வெள்ளை ஊமத்தை, வெட்டிவேர் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த மரக்கன்றுகளை பார்வையிட்டார் மேலும் மருத்துவ குணம் நிறைந்த அரியவகை மூலிகை செடிகளை பாதுகாக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

திருக்கழுக்குன்றம் வட்டம்  கீரப்பாக்கம் ஊராட்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட ஜே.சி.கே நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா பனியனையும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பார்வையிட்டார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருந்த புறநோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டு அறிந்தார்.

இதேபோல், புதியதாக கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், வளாகத்தில் பொதுப்பணித் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மரக்கன்றினை நட்டார். மேலும் செங்கல்பட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேலி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் குடியிருப்பு வீடுகளை ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் ஆத்தூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் பயிர் செய்யப்பட்டுள்ள மரச் செடிகளை பார்வையிட்டார். மேலும் நெடுஞ்சாலை துறையின் சார்பில் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மேம்பால பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் பொழுது மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத், மாவட்ட வன அலுவலர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை  (கட்டடம்) தலைமைப் பொறியாளர் விஸ்வநாத், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், சார்  ஆட்சியர் (பயிற்சி) சஞ்ஜீவனா, தலைமை பொறியாளர் கீதா, சுற்றுலாத்துறை பொது மேலாளர் பாரதிதேவி, நகராட்சி நிர்வாக  மண்டல இயக்குனர் சசிகலா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: