205 ரன் குவித்தது ராயல் சேலஞ்சர்ஸ்

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. கேப்டன் டு பிளெஸ்ஸி, அனுஜ் ராவத் இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். ஓடியன் ஸ்மித் வீசிய 4வது ஓவரில் டு பிளெஸ்ஸி 7 ரன் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷாருக் கான் கோட்டைவிட்டார். இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட டு பிளெஸ்ஸி பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்தார். அனுஜ் 21 ரன்னில் வெளியேற, டு பிளெஸ்ஸி - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்தது. சிக்சர் மழை பொழிந்த டு பிளெஸ்ஸி 88 ரன் (57 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் அமர்க்களப்படுத்த, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. கோஹ்லி 41 ரன் (29 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் 32 ரன்னுடன் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Stories: