×

அக்சர், ஷர்துல் அதிரடியில் டெல்லி அபார வெற்றி: இஷான் அரை சதம் வீண்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மும்பை தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித், இஷான் கிஷன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தது. ரோகித் 41 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் பாவெல் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த அன்மோல்பிரீத் 8 ரன்னில் வெளியேற, திலக் வர்மா 22 ரன், போலார்டு 3 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய இஷான் 34 பந்தில் அரை சதம் அடித்தார். டிம் டேவிட் 12 ரன்னில் வெளியேறினார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்தது. இஷான் 81 ரன் (48 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), டேனியல் சாம்ஸ் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 4.1 ஓவரில் 32 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

செய்பெர்ட் 21 ரன் (14 பந்து, 4 பவுண்டரி), மன்தீப் சிங் 0, கேப்டன் ரிஷப் பன்ட் 1 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், பிரித்வி ஷா - லலித் யாதவ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. பிரித்வி 38 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரோவ்மன் பாவெல் (0) இருவரும் பாசில் தம்பி பந்துவீச்சில் வெளியேற, டெல்லி அணி மீண்டும் சரிவை சந்தித்தது. எனினும், அடுத்து வந்த ஷர்துல் தாகூர் அதிரடியாக 11 பந்தில் 22 ரன் விளாச (4 பவுண்டரி) ஆட்டம் டெல்லி பக்கம் திரும்பியது. ஷர்துல் 22 ரன் எடுத்து பாசில் தம்பி பந்துவீச்சில் ரோகித்திடம் பிடிபட, மும்பை நம்பிக்கையுடன் தாக்குதலை தீவிரப்படுத்தியது. பரபரப்பான கடைசி கட்டத்தில், லலித் யாதவ் - அக்சர் படேல் ஜோடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு மும்பையின் நம்பிக்கையை சிதைத்தது.

இவர்களின் அபார ஆட்டத்தால் டெல்லி அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. லலித் யாதவ் 48 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), அக்சர் படேல் 38 ரன்னுடன் (17 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பாசில் தம்பி 3, முருகன் அஷ்வின் 2, தைமல் மில்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். வேகப் பந்துவீச்சாளர்கள் டேனியல் சாம்ஸ் 4 ஓவரில் 57 ரன் (ஓவருக்கு 14.25 ரன்), ஜஸ்பிரித் பும்ரா 3.2 ஓவரில் 43 ரன் (ஓவருக்கு 12.90 ரன்) வாரி வழங்கியது மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டெல்லி சுழல் குல்தீப் யாதவ் (4-0-18-3) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Tags : Akshar ,Shardul ,Delhi ,Ishaan , Akshar, Shardul in action, Delhi won by a huge margin: Ishaan wasted half a century
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு