×

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றால் விமானப் படை வீரர்களும் ஒன்றிய பணியில் சேரலாம்: ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ‘யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற விமானப்படை வீரர்களும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளாக சேரலாம்’ என ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் விமானப்படையைச் சேர்ந்த மவுரியா என்பவரும், பீகார் மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் குல்தீப் விபூதி என்பவரும் தேர்ச்சி பெற்றனர். இதனால் விமானப்படையில் இருந்து விலகி சிவில் சர்வீஸ் பணியில் சேர அவர்கள் விரும்பினர். ஆனால், விமானப்படை இவர்களுக்கு ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்க மறுத்தது.

இதை எதிர்த்து இருவரும் ராணுவ தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்து நீதிபதி ராஜேந்திர மேனன் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற விமானப்படை வீரர்கள் ராஜினாமா செய்து சிவில் சர்வீஸ் பணியில் முதல் வகுப்பு அதிகாரிகளாக சேர அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களை 2 வாரங்களுக்குள் விடுவித்து, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்கி, சிவில் சர்வீஸ் பணியில் சேர விமானப்படை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விமானப்படை தனது முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்து, ஸ்கில் கிரேடு ஏ இல்லாமல் சிவில் சர்வீஸ் பணியில் சேர அனைத்து அதிகாரிகளுக்கும் அனுமதிக்கும் வகையிலான தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும், முன் அனுமதியை ஆன்லைன் பெறுவதற்கான வசதியையும் செய்து தர வேண்டும்,’ என உத்தரவிட்டனர்.

Tags : Air ,UPSC , Air Force soldiers can join Union service if they pass UPSC exam: Court-martial
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...