×

உணவு, எரிபொருளை மொத்தமாக காலி செய்ய சேமிப்பு கிடங்குகளை தகர்க்கும் ரஷ்யா: அடுத்த மரியுபோல் நகரமாக மாறுகிறது செர்னிஹிவ்

லிவிவ்: உக்ரைனில் ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. கார்கிவ் அணு ஆராய்ச்சி மையத்தின் மீது குண்டுகளை வீசிய ரஷ்ய ராணுவம், லிவிவ் நகரின் உணவு, எரிபொருள் கிடங்குகள் மீது சரமாரி ராக்கெட் குண்டுகளை வீசி தகர்த்தது. செர்னிஹிவ் நகரில் கடுமையான நாச வேலைகளை ரஷ்ய ராணுவம் தொடங்கியிருப்பதால், மரியுபோல் போல் இந்த நகரமும் சூறையாடப்படும் என அஞ்சப்படுகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க அந்நாட்டின் மீது கடந்த மாதம் 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. ஒரு மாதத்தை தாண்டி போர் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் பின்தங்கின. இதனால் தாக்குதல் சற்று குறைந்திருந்திருந்த நிலையில், ரஷ்யா தற்போது கூடுதல் படைகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்து சென்ற நிலையில், அதன் அருகாமையில் சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள உக்ரைன் நகரமான லிவிவ்வில் நேற்று முன்தினம் இரவே ரஷ்யா வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

லிவிவ் நகரில் உள்ள உணவு, எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை ஏவி தகர்த்துள்ளது. எரிபொருள் கிடங்கு மீது 3 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள காவலாளி ஒருவர் தெரிவித்தார். இதில் 2 எரிபொருள் டேங்குகள் முற்றிலும் தீப்பற்றின. இதே போல், மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உணவு கிடங்கையும் ரஷ்யா குறிவைத்து தகர்த்துள்ளது. எதிர்கால தேவைக்காக எதையும் உக்ரைன் அரசு சேமிக்கக் கூடாது என்பதற்காக இதுபோன்ற கிடங்குகள் தொடர்ந்து குறிவைத்து தகர்க்கப்படுகின்றன. ஏற்கனவே, தலைநகர் கீவ்வின் புறநகரான இர்பினின் கலினிவ்கா பகுதியில் எரிபொருள் சேமிப்பு கிடங்கு ஒன்றை ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டது.
 
இதுமட்டுமின்றி, நீண்ட தூர இலக்கை தகர்க்கும் எஸ்-300 ஏவுகணை மூலம் கீவ் அருகே உள்ள ஆயுத கிடங்கையும், போர் விமான எதிர்ப்பு அமைப்பையும், ஏராளமான டிரோன்களையும் அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் கூறி உள்ளது.
இப்போரில் அதிகம் பாதிக்கப்பட்ட உக்ரைன் நகரம் மரியுபோல். அங்கு கிட்டத்தட்ட அனைத்து குடியிருப்பு கட்டிடங்களையும் ரஷ்ய படையினர் நாசம் செய்து விட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது செர்னிஹிவ் நகரில் இதே போன்ற தாக்குதல் தொடங்கி இருப்பதாக அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்த மரியுபோலாக, செர்னிஹிவ் நகரை ஆக்க ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து குண்டு சத்தங்கள் கேட்டபடி இருந்ததாக பதுங்கு குழிகளில் தங்கியுள்ள மக்கள் கூறினர். இதனால் வீட்டின் அடித்தளத்தில் பதுங்கியிருந்த மக்கள் காலையில், உணவு, தண்ணீர் தேடி காலி கேன்களுடன் அலையும் அவலம் நிலவுகிறது. அங்கு தண்ணீர், உணவு பற்றாக்குறை கடுமையாக உள்ளது. மொத்தம் 2.8 லட்சம் மக்கள் வசிக்கும் செர்னிஹிவ் நகரில் பாதிக்கு பாதி மக்கள் வெளியேறி உள்ளனர். ஏற்கனவே செர்னோபிள் அணு மின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்ததியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், கார்கிவ் நகரில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் மீதும் நேற்று குண்டுவீசியது. இதில், மருத்துவ மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கான கதிரியக்க ஐசோடோப்புகளின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக அமைக்கப்பட்ட புதிய நியூட்ரான் மைய கட்டிடம் சேதமடைந்துள்ளது.

அதே சமயம், டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகிய கிளர்ச்சிப்படை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நகரங்களை உள்ளிடக்கிய டான்பாஸ் பிராந்தியத்தையே ஒட்டு மொத்தமாக கைப்பற்ற ரஷ்யா, உக்ரைன் படைகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை குடியிருப்பு பகுதிகளில் வீசி ரஷ்யா போர் குற்றத்தில் ஈடுபடுவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டி உள்ளது. போர் தொடங்கி ஒரு மாதத்தில் இதுவரை 37 லட்சம் மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை இப்போரில் 139 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

* 3 கிராமங்களை மீட்ட உக்ரைன்
உக்ரைன் படைகள் ஜபோரிஜியா மாகாணத்தில் உள்ள ட்ரோஸ்டியானெட்ஸ் கிராமத்தையும், சுமியில் உள்ள ஒப்லாஸ்ட், பொல்டவ்கா ஆகிய 2 கிராமங்களையும் ரஷ்யாவிடமிருந்து மீட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. அங்கு சண்டையிட்ட ரஷ்ய வீரர்கள் சிலரையும் சிறை பிடித்துள்ளனர். அதே சமயம், செர்னிஹிவ் அருகே அமைந்துள்ள ஸ்லாவுடிச் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது. இது, செர்னோபிள் அணு மின் நிலைய பணியாளர்கள் வசிப்பதற்காக உருவாக்கப்பட்ட நகரமாகும். இங்கு தற்போது நுழைந்து ரஷ்ய படைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகர மக்கள் வீதியில் போராட்டம் நடத்தியதாக அந்நகர ஆளுநர் ஒலேக்சான்டிர் கூறி உள்ளார். ரஷ்ய படையினர் வானை நோக்கி சுட்டு எச்சரித்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதாக ஆளுநர் கூறி உள்ளார். முன்னதாக ஆளுநர் ஒலேக்சான்டிரை ரஷ்ய ராணுவம் கடத்தியதாகவும் பின்னர் விடுவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

* விரைவில் கொரில்லா போர்
உக்ரைன் ராணுவ உளவுத்தலைவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உக்ரைனை இரண்டாக பிரிக்க ரஷ்யா முயற்சிக்கிறது. அதன் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஒன்றிணைத்து ஒரே நாடாக்க காய் நகர்த்துகிறது. எனவே, ரஷ்ய ஆதரவுப்படை வசமுள்ள பகுதிகளில் விரைவில் கொரில்லா தாக்குதல் தொடங்கப்படும்,’’ என்றார். கொரில்லா போர்முறை என்பது ஆயுதம் தாங்கிய பொதுமக்களை கொண்ட போராளி குழுவினர், மறைந்திருந்து பெரிய படைகளை எதிர்த்து போரிடுவதாகும். இதற்கிடையே, கிளர்ச்சிப்படை வசமுள்ள லூஹான்ஸ்க் பிராந்தியத்தின் தலைவர் லியோனிட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திரமான பகுதிகளாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இப்பகுதிகளை ரஷ்யாவுடன் ஒன்றிணைக்கு விரைவில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

* புடின் கசாப்பு கடைக்காரர் ஆட்சியில் நீடிக்க கூடாது
போலந்தில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அப்போது அவர் ரஷ்ய அதிபர் புடினை, ‘கசாப்பு கடைக்காரர்’ என விமர்சித்தார். மேலும், ‘நீண்ட நாள் புடினை ஆட்சியில் இருக்க விட முடியாது’ என்றும் எச்சரித்தார். இந்த பேச்சு அமெரிக்கா மீது புடினுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் இதுபோன்ற பேச்சுக்களை ஆதரிக்க முடியாது என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறி உள்ளார்.

அமெரிக்கா விளக்கம்: இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் நேற்று அளித்த விளக்கத்தில், ‘‘அதிபர் புடின் உக்ரைனுக்கு எதிராகவோ வேறு எந்த நாட்டிற்கும் எதிராகவோ போர் நடத்துவதையோ, ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதையோ அனுமதிக்க முடியாது என்ற கோணத்தில் அதிபர் பைடன் பேசி உள்ளார். மற்றபடி ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எந்த உத்தியையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஆட்சி மாற்றம் என்பது ரஷ்ய மக்களை பொறுத்தது, அவர்களே முடிவெடுக்க வேண்டியவர்கள்,’’ என்றார்.

* ஆயுதங்களை வழங்குங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நாட்டிற்கு போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு மேற்கத்திய நாடுகளை வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் ஜெலன்ஸ்கி உணர்ச்சிவசப்பட்டு பேசுகையில், ‘‘ஐரோப்பாவில் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய ஆயுதங்கள் தூசி படிந்து கொண்டிருக்கின்றன. ரஷ்ய விமானத்தை இயந்திர துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முடியாது. எனவே எங்களுக்கு போர் விமானங்கள், டாங்கிகள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் வேண்டும். நேட்டோ என்ன செய்கிறது? அது ரஷ்யாவால் வழிநடத்தப்படுகிறதா? அவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள்? 32 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், கொஞ்சம் தைரியத்துடன் நேட்டோ எங்களுக்கு உதவ முன்வர வேண்டும். நாங்கள் கேட்பது நேட்டோவிடம் உள்ள ஆயுதத்தில் ஒரு சதவீதம் மட்டும்தான். அதற்கு மேல் நீங்கள் தர வேண்டாம்,’’ என்றார். மேலும், தனது நாட்டு மக்கள் உணவு, தண்ணீருக்காக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் அவர்கள் ரஷ்யா மீது கடும் ஆத்திரமடைந்துள்ளதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.

* ஒடேசாவை பாதுகாக்க களமிறங்கும் மக்கள்
கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஒடேசா துறைமுக நகரம் உக்ரைனின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் மிகப்பெரிய துறைமுகமும், உக்ரைன் கடற்படையின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. இதனால்தான் ரஷ்யா அடுத்ததாக இந்நகரை குறிவைக்கும் என்ற அச்சம் ஒடேசா நகர மக்களுக்கு எழுந்துள்ளது. கடந்த வாரம் போர்க்கப்பலில் இருந்து ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், ஒடேசா மக்களின் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. உக்ரைனை வீழ்த்த இந்த நகரைத்தையும் மரியுபோல் போல ரஷ்ய ராணுவம் தரைமட்டமாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல வரலாற்று சிறப்புகளை கொண்ட இந்நகரை பாதுகாக்க பொதுமக்களே களமிறங்கி உள்ளனர். இங்கிருந்து 1 சதவீதம் பேர் மட்டுமே தற்போது வரை வெளியேறி உள்ளனர். பலரும் ஆயுதம் ஏந்தி பயிற்சி பெற்று வருகின்றனர். ரஷ்யா தாக்கினால் ஒடேசாவை பாதுகாக்க உயிரையும் பணயம் வைக்க ஒடேசா மக்கள் தயாராகி உள்ளனர்.

* ரஷ்ய உளவாளி சிக்கினார்
லிவிவ் நகரில் சேமிப்பு கிடங்கு மீதான தாக்குதலின் போது, இலக்கு நோக்கி ஏவுகணை செல்வதை ஒரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவன் எடுத்த வீடியோ, புகைப்படங்களை 2 ரஷ்ய செல்போன் நம்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே அவன் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags : Russia ,Chernihiv ,Mariupol , Russia demolishes warehouses to empty food and fuel altogether: Chernihiv becomes next Mariupol city
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...