×

திருப்பதியில் 2வது நாளாக அலைமோதும் பக்தர்கள்: அறைகள் கிடைக்காமல் தவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களாக இலவச தரிசன டிக்கெட், ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்டவை தினந்தோறும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வார விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்தபடி உள்ளனர்.

இதனால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுன்டர்களான அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் எதிரே உள்ள னிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள் அலிபிரி சோதனைச்சாவடி வழியாக திருமலைக்கு செல்ல வேண்டும். வழக்கமாக 6,000 முதல் 8,000 வாகனங்களில் பக்தர்கள் வருவார்கள். ஆனால் நேற்று 8,000 முதல் 12,000 வாகனங்களில் பக்தர்கள் திருமலைக்கு வந்தபடி உள்ளனர். இதனால் அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் மற்றும் உடைமைகள் சோதனை செய்வதால் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருமலையில் உள்ள 7 ஆயிரம் பக்தர்கள் தங்கும் அறைகளில் 50 சதவீதம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் கொட்டும் பனியில் வெட்ட வெளியில் இரவு முழுவதும் காத்திருந்தனர். எனவே, பக்தர்கள் திருப்பதிலேயே தங்கி தங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டில் உள்ள நேரத்தில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையும் அதிகளவு பக்தர்கள் திருலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இன்று காலை முதலே அலிபிரி சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று காலை முதல் 69,897 பேர் தரிசனம் செய்தனர். 38,099 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ரூ.3.92 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

Tags : Tirupathi , Devotees roaming Tirupati for the 2nd day: Suffering from lack of rooms
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...