×

தூத்துக்குடியில் பயங்கரம்; பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய தாய் சரமாரி குத்திக் கொலை: காதலனுடன் சேர்ந்து மகள் வெறிச்செயல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய தாய் சரமாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். காதலனுடன் சேர்ந்து மகளே இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி, மேல சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. டிரைவர். இவரது மனைவி முனியலட்சுமி (39). கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை விட்டு பிரிந்து ஜெயக்குமார் என்பவருடன் முனியலட்சுமி வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மூத்த மகளை பாலியல் தொழில் செய்ய முனியலட்சுமி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே, பணத்திற்கு பஞ்சம் இருக்காது; ஆடம்பரமாக வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் மூத்தமகள் இதற்கு சம்மதிக்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று உச்சகட்டமாக மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்துள்ளார். அவரிடம் போய் உல்லாசமாக இரு. கூடுதலாக பணம் தருவார் என்று மகளிடம் முனியலட்சுமி கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத மூத்த மகள், தொடர்ந்து பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தும் தாயை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

இதுபற்றி நேற்று தனது காதலன் தூத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (20) என்பவரிடம் கூறியுள்ளார். ‘‘என் அம்மா உயிரோடு இருந்தால், எப்படியும் என்னை பாலியல் தொழிலில் தள்ளி விடுவார்’’ என்று கூறி குமுறி அழுததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் கண்ணன், அவரது நண்பர் தங்கக்குமார் மற்றும் ஒருவர் என 3 பேர் முனியலட்சுமி வீட்டுக்கு வந்தனர். முனியலட்சுமியின் மூத்த மகள் வீட்டுக் கதவை திறந்து, அவர்கள் 3 பேரையும் உள்ளே அழைத்தார். 3 பேரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த முனியலட்சுமியை, 3 பேரும் முதலில் கழுத்தை நெரித்துள்ளனர்.

அவர் அலறவே, கத்தியால் உடலின் பல இடங்களில் சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் முனியலட்சுமி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து 3 பேரும் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து மூத்த மகள் தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு செல்போனில் புகார் செய்தார். அதில், ‘‘தாய் முனியலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த வாலிபர் ஜெயக்குமார் மற்றும் 4 பேர் சேர்ந்து, தனது தாயை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டதாகவும், தான் தூங்கிக் கொண்டிருந்ததால் இதைத் தடுக்க முடியவில்லை’’ என்றும் கூறியுள்ளார்.

தகவலறிந்த தூத்துக்குடி எஸ்.பி. சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜா மற்றும் போலீசார் முனியலட்சுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையின்போது முனியலட்சுமியின் மூத்தமகள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே அவரை தென்பாகம் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பெண் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், தனது தாய் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட தொடர்ந்து டார்ச்சர் செய்ததால், காதலன் கண்ணன் மற்றும் அவரது நண்பர்களை பயன்படுத்தி முனியலட்சுமியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து மூத்தமகளை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் முத்தையாபுரத்தில் பதுங்கியிருந்த கண்ணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தங்கக்குமார் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

4 நாட்களில் 3 கொலை
தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நகைக்காக மூதாட்டி பவானி என்பவரும், கஞ்சா விற்ற தகராறில் ரவுடி முத்துப்பாண்டியனும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு முனியலட்சுமி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 4 நாட்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Tags : Thoothukudi ,Chamari , Terror in Thoothukudi; Mother stabbed to death for forcing sex worker: Daughter goes on a rampage with boyfriend
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது