25 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தர்மபுரம் ஆதினத்துக்கு சொந்தமான அபிராபி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இது திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற கோயிலாகும். தேவர்கள், அசுரர்கள் கொண்டு வந்த அமுதகடம் இங்கு வைக்கப்பட்டபோது அமுதகடமே சிவலிங்க வடிவமாக மாறியதால் இவ்வூர் கடவூர் என பெயர் பெற்றதாகவும், இறைவனும் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

மார்க்கண்டேயர் இங்கு இறைவனை வழிபட்டபோது எமன் அவர் உயிரை எடுக்க வந்ததாக புராணக் கதை உண்டு. மேலும் அபிராமி அம்மனின் அருள்பெற்ற அபிராமி பட்டர் அந்தாதி பாடி அரசனுக்கு அமாவாசையை பவுர்ணமியாக்கி காட்டிய சிறப்பும் உண்டு. இக்கோயிலில் கால சம்ஹாரமூர்த்தி எழுந்தளியிருப்பதால் 60, 70, 80ம் ஆண்டு பிறந்த நாளில் இங்கு வந்து ஆயுள் ஹோமம், மிருத்யுஞ் ஜெயசாந்தி செய்து கொள்வது சிறப்புடையதாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் வந்து  தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோயிலில் கடைசியாக 1997ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 27ம் தேதி (இன்று) நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணி நடந்தது. இதைதொடர்ந்து கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 23ம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜை நடந்தது.  24, 25ம் தேதிகளில் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை 8வது கால யாகசாலை பூஜை நடந்தது.

இதைதொடர்ந்து காலை 11 மணியவில்  கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடங்கள் புறப்பாடு நடந்தது. இதையடுத்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: