×

2 ஆண்டுகளுக்கு பிறகு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா: 5ம்தேதி துவங்குகிறது

உளுந்தூர்பேட்டை: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருகிற 5ம்தேதி தொடங்குகிறது. இதில் சாமி கண்திறத்தல், திருநங்கைகள் தாலி கட்டுதல், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து திருநங்கைகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரானா தொற்று பரவல் காரணமாக நடைபெறவில்லை.

18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 5ம்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி கண் திறத்தல் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 19ம்தேதியும், 20ம் தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளது. இரண்டு வருடத்திற்கு பிறகு நடைபெறும் இந்த சித்திரை பெருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தருவது என்றும், பேருந்து வசதிகள் மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து திருவிழாவினை சிறப்பாக நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

Tags : Koovagam Kuttandavar Temple ,Chithirai Peruvija , After 2 years, Koovagam Kuttandavar Temple Chithirai Peruvija starts on the 5th
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சிறப்பு...