×

தோனி அரை சதம் வீண் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

மும்பை: நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தொடக்க லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ருதுராஜ், கான்வே இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். உமேஷ் வீசிய முதல் ஓவரிலேயே ருதுராஜ் டக் அவுட்டாகி வெளியேற, சென்னை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து கான்வேயுடன் உத்தப்பா இணைந்தார். அவர் நம்பிக்கையுடன் அடித்து விளையாட, சிஎஸ்கே ஸ்கோர் சற்று வேகம் எடுத்தது. 8 பந்துகளை சந்தித்த கான்வே 3 ரன் மட்டுமே எடுத்து உமேஷ் வேகத்தில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார்.

உத்தப்பா - ராயுடு ஜோடி 3வது விக்கெட்டுக்கு 21 ரன் சேர்த்தது. உத்தப்பா 28 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, வருண் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ராயுடு 15 ரன் எடுத்து (17 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் அவுட்டாக, துபே 3 ரன் எடுத்து ரஸ்ஸல் வேகத்தில் நரைன் வசம் பிடிபட்டார். சென்னை 10.5 ஓவரில் 61 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கேப்டன் ஜடேஜாவுடன் முன்னாள் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். கொல்கத்தா ஸ்பின்னர்கள் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, சென்னை ஸ்கோர் வேகம் எடுக்க முடியாமல் தட்டுத் தடுமாறியது. சிஎஸ்கே 15 ஓவர் முடிவில் 73 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில், கடைசி கட்ட ஓவர்களை தோனி பதம் பார்க்க சென்னை ஸ்கோர் 100 ரன்னை கடந்தது.

குறிப்பாக, மாவி மற்றும் ரஸ்ஸல் பந்துவீச்சை சிதறடித்த தோனி அரை சதம் அடித்து அசத்தினார். சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன் குவித்தது. ஜடேஜா 26 ரன் (28 பந்து, 1 சிக்சர்), தோனி 50 ரன்னுடன் (38 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் உமேஷ் 2, வருண், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 132 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேகேஆர் களமிறங்கியது. ரகானே, வெங்கடேஷ் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. வெங்கடேஷ் 16 ரன், ரகானே 44ரன், பில்லிங்ஸ் 25 ரன் எடுத்து அவுட் ஆகினர்.  சென்னை பந்துவீச்சில் பிராவே மட்டுமே சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். கடைசியில் 18.3 ஓவரில் கொல்கத்தா அணி 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்த கேப்டன் ஷ்ரேயாஸ் (20 ரன்), வெற்றிக்கு தேவையான ரன்னை பவுண்டரி மூலம் பெற்று தந்தார். இதன் மூலம் 9 பந்து மீதம் இருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி  கொல்கத்தா முதல் வெற்றியை பதிவு செய்தது.

Tags : Toni ,chennai ,Kolkata , Dhoni beat Chennai by half a century in Kolkata
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்