×

மறைமுக உள்ளாட்சி தேர்தல் 64 இடங்களில் நடந்தது: பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி

சென்னை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 64 உள்ளாட்சி இடங்களுக்கு மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடந்தது. தொடர்ந்து, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் கடந்த 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது, பல்வேறு காரணங்களால் 64 பதவியிடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, காலியாக இருந்த 64 பதவியிடங்களுக்கும் மார்ச் 26ம் தேதி (நேற்று) நகராட்சி, பேரூராட்சி  தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல்  நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதற்கு காலை 9.30 மணிக்கும், துணை தலைவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிற்பகல் 2.30 மணிக்கும் நடந்தது.

பூந்தமல்லி நகராட்சிக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்த காஞ்சனா வெற்றி பெற்றார். சேலம் பேளூர் பேரூராட்சி தலைவராக திமுகவும், காடையாம்பட்டி பேரூராட்சியில் தலைவராக விசிகவை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக வேட்பாளர் கைப்பற்றினார். மயிலாடி பேரூராட்சித் தலைவர் தேர்தலில் பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றார். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் திமுக-அதிமுக இடையே மோதல் ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியையும், மேட்டூரை அடுத்த நங்கவள்ளி பேரூராட்சி தலைவர் பதவியையும் அதிமுக கைப்பற்றியது. இதேபோல பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.   
இதை தொடர்ந்து, வரும் 30ம் தேதி வார்டு குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டமும், 31ம் தேதி வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள், நியமனக்குழு உறுப்பினர்கள், ஒப்பந்தக்குழு உறுப்பினர் மற்றும் நிலைக்குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலும் நடைபெற உள்ளது.

Tags : Dimugha , Indirect local elections were held in 64 seats: DMK won in most of the seats
× RELATED கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்