டெல்லிக்கு வருகிற 31ம் தேதி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை; 2ம் தேதி கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார்

சென்னை: வருகிற 31ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை 5 நாள் வெளிநாடு பயணமாக துபாய் சென்றார். துபாய் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தமிழகத்தில் தொழில் துவங்க சாதகமான சூழ்நிலை இருப்பதால் தொழில் துவங்க தமிழகத்திற்கு வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து கலந்துரையாடினார். மேலும் அங்குள்ள தமிழர்களிடமும் அவர் கலந்துரையாடினார். ெவளிநாடு பயணத்தை முடித்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 29ம் தேதி சென்னை திரும்புகிறார்.

அதைத்தொடர்ந்து 31ம் தேதி காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் பிரதமரிடம் பேச உள்ளார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்று இரவு டெல்லியில் அவர் தங்குகிறார். 1ம் தேதி டெல்லியில் முக்கிய தலைவர்களை, அதாவது எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது பாஜவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களிடம் அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம், முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2ம் தேதி டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யா மார்க் பகுதியில் திமுகவின் புதிய கட்சி அலுவலகமான அண்ணா-கலைஞர் மாளிகையை அவர் திறந்து வைக்கிறார். டெல்லியில் உள்ள இந்த அண்ணா-கலைஞர் மாளிகையின் முதல் தளத்தில் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசுவதற்கான இடமும், தலைவருக்கான பிரத்யேக அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் கான்பரன்சிங் அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அறிவாலயத்தில் உள்ளது போலவே நூலகமும், அமர்ந்து படிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் எம்பிக்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் நிர்வாகிகள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் தங்கும் அறை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* புகைப்பட கலைஞர் செந்தில்குமரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வேர்ல்டு பிரஸ் போட்டோ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரன் World Press Photo அமைப்பின் World Press Photo 2022 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். மனித - வன விலங்கு மோதலை வெளிக்கொண்டு வரும் இவரது படைப்புகள் அனைவரது கவனத்தையும் பெற வேண்டியவை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: