×

முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்: இழப்பீடாக ரூ.100 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து பொய்யான, அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ள தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவருக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து தமிழக மக்கள் அவரை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர். அவர் தமிழக முதல்வராக பதவியேற்றதில் இருந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரது மேம்பாட்டு திட்டங்களால் இந்தியாவில் மிகச்சிறந்த முதலமைச்சர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற முடியாத தமிழக பாஜ தலைவரான நீங்கள், தமிழக முதல்வர் மீது மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருகிறீர்கள். அரசுமுறை பயணமாக, முதல்வரின் கடமையை செய்யும் வகையில் தமிழக முதல்வர் துபாயில் நடைபெறும் ‘துபாய் எக்ஸ்போ 2022’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக சென்றுள்ளார். அவர் மீது தொடர்ந்து நீங்கள் பொய்யான, அவதூறு கருத்துகளை பொதுமக்கள் மத்தியில் பரப்பி வருகிறீர்கள்.

துபாயில் முதல்வரின் குடும்ப நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் பொய்யான கருத்துகளை வெளியிட்டுள்ளீர்கள். துபாய் எக்ஸ்போ 2022 குறித்தும் அதில் தமிழக முதல்வர் கலந்துகொள்வதும் சாதாரண மக்களுக்குகூட தெரியும். மாநிலத்திற்கு முதலீடுகளை பெற்று வருவதற்காகவே முதல்வர் துபாய் சென்றுள்ளார். அங்கு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துள்ளார். தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் வளர்ச்சிக்கும் அவரது பயணம் முக்கிய பங்காற்றுகிறது. உங்களது இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மலிவான விளம்பரம் தேடுவதற்காகத்தான் என்று அறிகிறோம்.

இதுபோன்ற உங்கள் அறிக்கைகளால் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதை தடுப்பது தேச விரோத செயலாகும். நீங்கள் கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முதல்வர் மீது சுமத்தியிருப்பது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன்கீழ் (அவதூறு பரப்புதல்) கிரிமினல் குற்றமாகும். குற்றவியல் நடைமுறை விதி 199ன்கீழ் கிரிமினல் வழக்கு தொடர முடியும். எனவே, இதற்கான இழப்பீடை செலுத்த வேண்டும்.

 மாநில முதல்வர் தனது கடமைகளை செய்யும்போது அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை கூறியிருக்கும் நீங்கள் இதுகுறித்து 24 மணி நேரத்திற்குள் முதல்வரிடம் பொது வெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வருக்கு எதிரான அவதூறு அறிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் செய்த அவதூறுக்கு இழப்பீடாக ரூ.100 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடரப்படும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

* 64 முறை உலகம் சுற்றி வந்த மோடியின் முதலீடு எத்தனை கோடி?
ஒரு முதல்வர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக வெளிநாடுக்கு பயணம் செய்தால் அதை கொச்சைப்படுத்தி பேசுவது எந்த வகையில் நியாயம். அப்படி பார்த்தால், இன்றைய பிரதமர் நரேந்திர மோடி ஏறத்தாழ 64 முறை உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் போகும் போது சம்பாதித்ததை எல்லாம் அங்கே முதலீடு செய்ய போயிருக்கிறார் என்று அர்த்தமா. முதல்வர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டது அவர் முதலீடு செய்வதற்காக என்றால், அப்போது மோடியை 3 விரல்கள் காட்டுகிறதே, எத்தனை கோடி முதலீடு செய்து இருப்பார் என்று மக்கள் கேட்க மாட்டார்களா, பாஜ தலைவர் அண்ணமலை பொறுப்புணர்ச்சியோடு பேச வேண்டும்.

Tags : Thimuka ,Tamil Paja ,Annamalai ,CM ,Dubai , DMK notice to Tamil Nadu BJP leader Annamalai for slandering CM's visit to Dubai: CM urges to pay Rs 100 crore as compensation to relief fund
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி