சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் 5 மொழிகளில் திரைக்கு வருகிறது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் 5 மொழிகளில் திரைக்கு வருகிறது. ஒரே நேரத்தில் விஜய் படம் 5 மொழிகளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும். சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம், ‘பீஸ்ட்’. இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, இயக்குனர் செல்வராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’, கு.கார்த்திக் எழுதி விஜய் பாடியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 13ம் தேதி ‘பீஸ்ட்’ படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது  இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது என்று சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள முதல் பான்-இந்தியா படம் ‘பீஸ்ட்’ என்பதால், ரசிகர்கள் இந்த தகவலை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: