×

அரை சதம் விளாசினார் தோனி கொல்கத்தாவுக்கு 132 ரன் இலக்கு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 132 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அபாரமாக விளையாடிய சென்னை வீரர் தோனி அரை சதம் அடித்தார். ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ருதுராஜ், கான்வே இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர்.

உமேஷ் வீசிய முதல் ஓவரிலேயே ருதுராஜ் டக் அவுட்டாகி வெளியேற, சென்னை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து கான்வேயுடன் உத்தப்பா இணைந்தார். அவர் நம்பிக்கையுடன் அடித்து விளையாட, சிஎஸ்கே ஸ்கோர் சற்று வேகம் எடுத்தது. 8 பந்துகளை சந்தித்த கான்வே 3 ரன் மட்டுமே எடுத்து உமேஷ் வேகத்தில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார். உத்தப்பா - ராயுடு ஜோடி 3வது விக்கெட்டுக்கு 21 ரன் சேர்த்தது. உத்தப்பா 28 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, வருண் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ராயுடு 15 ரன் எடுத்து (17 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் அவுட்டாக, துபே 3 ரன் எடுத்து ரஸ்ஸல் வேகத்தில் நரைன் வசம் பிடிபட்டார். சென்னை 10.5 ஓவரில் 61 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கேப்டன் ஜடேஜாவுடன் முன்னாள் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார்.

கொல்கத்தா ஸ்பின்னர்கள் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, சென்னை ஸ்கோர் வேகம் எடுக்க முடியாமல் தட்டுத் தடுமாறியது. ஜடேஜா வழக்கத்துக்கு மாறாக தட்டித் தடவ, சிஎஸ்கே 15 ஓவர் முடிவில் 73 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில், கடைசி கட்ட ஓவர்களை தோனி பதம் பார்க்க சென்னை ஸ்கோர் 100 ரன்னை கடந்தது. குறிப்பாக, மாவி மற்றும் ரஸ்ஸல் பந்துவீச்சை சிதறடித்த தோனி அரை சதம் அடித்து அசத்தினார். சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன் குவித்தது. ஜடேஜா 26 ரன் (28 பந்து, 1 சிக்சர்), தோனி 50 ரன்னுடன் (38 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் உமேஷ் 2, வருண், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 132 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேகேஆர் களமிறங்கியது. ரகானே, வெங்கடேஷ் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

* ஸ்கோர் விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்
ருதுராஜ் கெயிக்வாட்    (சி) ராணா (பி) உமேஷ்    0
டெவன் கான்வே    (சி) ஷ்ரேயாஸ் (பி) உமேஷ்    3
ராபின் உத்தப்பா    (எஸ்டி.) ஜாக்சன் (பி) வருண்    28
அம்பத்தி ராயுடு    (ரன் அவுட்)    15
ரவீந்திர ஜடேஜா    (ஆட்டமிழக்கவில்லை)    26
ஷிவம் துபே    (சி) நரைன் (பி) ரஸ்ஸல்    3
எம்.எஸ்.தோனி    (ஆட்டமிழக்கவில்லை)    50
உதிரிகள்        6
மொத்தம்    (20 ஓவர், 5 விக்கெட்)    131
விக்கெட் வீழ்ச்சி: 1-2, 2-28, 3-49, 4-52, 5-61.
கேகேஆர் பந்துவீச்சு: உமேஷ் 4-0-20-2, மாவி 4-0-35-0, வருண் 4-0-23-1, நரைன் 4-0-15-0, ரஸ்ஸல் 4-0-38-1.


Tags : Dhoni ,Kolkata , Dhoni scored a half-century to give Kolkata a 132-run target
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...