×

உக்ரைனின் பதிலடியால் நொந்து நூடுல்ஸ் ‘ஆப்ஷன் பி’க்கு மாறிய ரஷ்யா: டான்பாசை மட்டுமே கைப்பற்ற முடிவு

கீவ்: உக்ரைன் படைகளின் உக்கிரமான தாக்குதலால் பெரும் உயிர் சேதங்களையும், பொருட்சேதங்களையும் சந்தித்து வரும் ரஷ்ய ராணுவம், தனது தாக்குதல் திட்டத்தை மாற்றி உள்ளது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு, கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. உக்ரைன் மீது 33வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் இழந்தும் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற முடியாமல் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய ராணுவ அமைப்பு மற்றும் ஆயுதங்கள் கொண்டுள்ள ரஷ்யாவால், உக்ரைனை சுற்றி வளைத்தும் ஆயுதப்படை ஸ்தம்பிப்பால் திணறி வருகிறது. இதை பயன்படுத்தி, உக்ரைன் ராணுவம், ரஷ்யா கைப்பற்றிய ஒவ்வொரு பகுதிகளையும் தற்போது கைப்பற்றி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் ஆயுத உதவியால், ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த ல நாட்களாக ரஷ்யாவின் பீரங்கிகள், ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

உக்ரைனின் தரை வழி தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், ரஷ்யா ராணுவம் பல இடங்களில் பின்வாங்கி வருகிறது. தலைநகர் கீவ்வுக்கு மிக அருகில் வந்த ரஷ்ய படைகள், தற்போது பல கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கி உள்ளன. பல இடங்களில் ரஷ்ய ஏவுகணைகள் இலக்கை சரியாக தாக்காமல் தோல்வியை தழுவி உள்ளன. ரஷ்ய ராணுவம் இந்த போருக்கு முழுமையாக தயாராததே இதற்கு காரணம் என கருதப்படுகிறது. வீரர்களும் போதிய பயிற்சி இல்லாமல் இருப்பதால், போரில் எளிதாக பலியாகி வருகின்றனர்.

ஆனால், மரியுபோல் நகரத்தை விடாமல் சுற்றுவளைத்து ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன. இங்கிருந்து வெளியேறாத லட்சக்கணக்கான மக்கள், உணவு, தண்ணீர், மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். உயிர் பிழைத்தால் போதும் என்று எண்ணி, தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் பதுங்கும் மக்களையும் ரஷ்ய படைகள் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவிலும் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. இந்நாட்டின் முக்கிய பதவிகளில் உள்ள பலர், அதிபர் புடினின் போக்கை கண்டித்து பதவி விலகி வருகின்றனர். போரில் பெரும் உயிர்ச்சேதம், பொருட்சேதத்தை ரஷ்ய ராணுவம் சந்தித்து வருவதால், இந்த எதிர்ப்பு மேலும் அதிகமாகி வருகிறது.

உக்ரைன் போரை முதலில் 2 முக்கிய திட்டங்களுடன்தான் ரஷ்ய ராணுவம் தொடங்கியது. முதல் ஆப்ஷன், உக்ரைன் முழுவதையும் தாக்கி கைப்பற்றுவது. 2வது ஆப்ஷன், ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை உக்ரைனின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்து தனி நாடாக அறிவிப்பது. தனது படை பலத்தால் உக்ரைனை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற நினைப்பில், அந்நாட்டை மொத்தமாக கைப்பற்ற அதிபர் புடின் முதலில் முடிவு செய்தார். அதனால்தான், உக்ரைன் முக்கிய நகரங்கள் அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

உக்ரைன் ராணுவ பலத்தை குறைக்கும் வகையில், ராணுவ கட்டிடங்கள், விமான தளங்கள், அரசு அலுவலகங்கள், அனுமின் நிலையங்கள், துறைமுகங்கள் என அடுத்தடுத்து தகர்த்தது. அடுத்து, மக்களை கொன்று தவிக்க விட்டால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சரணடைவார் என்று எண்ணியது. ஆனால், அதிபர் ஜெலன்ஸ்கி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா முன் வர வேண்டும். ஆனால், அமைதிக்காக உக்ரைன் தனது எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்ளாது என்று அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

கடந்த சில நாட்களாக உக்ரைன் வீரர்கள் உக்கிரமாக போர் புரிந்து வருகின்றனர். இதன் காரணமாக, ஏற்கனவே ரஷ்ய படைகள் கைப்பற்றி இருந்த பல இடங்கள், மீண்டும் உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. இதற்கு, அமெரிக்க உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆயுத உதவியே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஒருபுறம் உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை கொடுத்து உதவி வரும் நேட்டோ நாடுகள், மறுபுறம்  ரஷ்யாவின் மீது அடுத்தடுத்து புதிய பொருளாதார தடைகளை விதித்து மிரட்டி வருகின்றன. ரஷ்யாவின் மிகப் பெரிய பொருளாதார பலமாக இருப்பதே அதன் எண்ணெய், எரிவாயு விற்பனைதான். ஐரோப்பிய நாடுகளின் 40 சதவீத தேவையை ரஷ்யாதான் பூர்த்தி செய்கிறது. தற்போது, அமெரிக்கா நடுவில் நுழைந்து இதற்கு வெடி வைத்து விட்டது.

ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான எண்ணெய், எரிவாயுவை தானே சப்ளை செய்வதாக கூறி, ஒப்பந்தமும் போட்டு விட்டது. ரஷ்யாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. தனக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேருவதால், புடின் ஆட்டம் கண்டுள்ளார். போரிலும் வெற்றி பெற முடியவில்லை. நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் திட்டத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்கி உள்ளது. மேலும், முதலில் திட்டமிட்டது போல் ‘ஆப்ஷன் பி’யை தேர்வு செய்து, டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. 2014ம் ஆண்டு முதல் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியை சுதந்திர நாடாக அறிவிக்கக்கோரி கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

* தோஹா மாநாட்டில் தோன்றிய ஜெலன்ஸ்கி
கத்தாரில் உள்ள தோஹாவில் உலக நாடுகள் பங்கேற்றுள்ள மாநாடு நடக்கிறது. நேற்று இந்த மாநாடு நடந்து கொண்டிருந்தபோது, காணொலியில் வியக்கத்தக்க வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென தோன்றி ஆச்சர்யத்தை அளித்தார். அவர்களிடையே பேசிய அவர், ‘ரஷ்யா எங்கள் துறைமுகங்களை அழிக்கிறது. உக்ரைனின் ஏற்றுமதி பாதிப்பது, உலக நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உக்ரைன் கோதுமையின் இழப்பு ஏற்கனவே எகிப்து போன்ற மத்திய கிழக்கு நாடுகள் கவலை அடைந்துள்ளன. எங்கள் நாட்டை மட்டுமல்ல; முழு கிரகத்தையும் அணு ஆயுதங்களால் அழிக்க முடியும் என்று ரஷ்யா தற்பெருமை பேசுகிறது. புனிதமான ரமலான் மாதம், உக்ரைனில் உள்ள மக்களின் துயரத்தால் மறைக்கப்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

* போர்க் குற்ற ஆதாரங்கள் நவீன முறையில் சேகரிப்பு
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இயற்றப்பட்ட சர்வதேச போர் குற்ற சட்டங்களை ரஷ்ய படைகள் மீறுவதாக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, உக்ரைனில் பொதுமக்களின் வீடுகளை அழித்தல், மனிதநேய பாதைகளில் வெளியேறும் மக்களை சுடுவது, மருத்துவமனைகளை தாக்குவது, அப்பாவி மக்கள் மீது கொத்து குண்டுகள், ஏவுகணைகளை வீசுவது, மனித உயிரினத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அணுமின் நிலையங்களை  தாக்குவது, மக்களுக்கு மனிதாபிமான உதவி, உணவு கிடைக்க விடாமல் தடுப்பது போன்ற போர் குற்றங்களில் ரஷ்யா ஈடுபடுவதாக இந்த நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இந்த குற்றங்களுக்கான வலுவான ஆதாரங்களை திரட்டுவதற்காக இந்த நாடுகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதாக நேற்று பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், புடினை சிக்க வைக்க இவை வியூகம் வகுத்துள்ளன.

* துருக்கி சமரச முயற்சி
உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் முயற்சி செய்து வருகிறார். நேற்று அவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசிய பேசி, சமரச முயற்சி மேற்கொண்டார்.

* தப்பியோட முயன்ற தளபதியை சுட்டுக் கொன்ற ரஷ்ய வீரர்கள்
உக்ரைன் போரில் தனது பல முக்கிய தளபதிகளை ரஷ்ய படை இழந்துள்ளது. இந்நிலையில், 37வது துப்பாக்கி படைப்பிரிவுக்கு தலைமை வகித்த தளபதியை, அவருடைய சொந்த படைப்பிரிவை சேர்ந்தவர்களே சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இவர் சரியாக திட்டமிடாததால்,  இவருடைய படைப்பிரிவை சேர்ந்த ஏராளமான வீரர்கள் போரில் கொல்லப்பட்டனர். மேலும், சண்டை நடக்கும் போது இவர் தப்பியோடவும் முயன்றுள்ளார். இதனால், ஏற்கனவே இவர் மீது ஆத்திரத்தில் இருந்த வீரர்கள், அவரை சரமாரியாக சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

* ஆப்கானை போல் விரட்டி அடிக்க தினமும் 500 ஸ்டிங்கர்ஸ் கொடுங்க...
ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படைகள் 10 ஆண்டுகள் தாக்குதல் நடத்தியபோது, அங்குள்ள முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு அமெரிக்கா ஆயுதங்களை கொடுத்து உதவியது. இதில், தோளில் சுமந்து சென்று வீசக்கூடிய ‘ஸ்டிங்கர்ஸ்’ என்ற சிறிய ரக ஏவுகணையும், டாங்கிகளை அழிக்கும் ‘ஜாவலின்’ ரக ஏவுகணையும் முக்கிய பங்கு வகித்தன. இவற்றை பயன்படுத்தி ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டாங்கிகளை முஜாகிதீன்கள் அழித்தனர். இதனால், ரஷ்ய ராணுவம் போரை கைவிட்டது. இந்த ரக ஏவுகணைகளைதான் உக்ரைனுக்கும் தற்போது அமெரிக்கா கொடுத்து வருகிறது. ஏற்கனவே, 800 ஸ்டிங்கர்ஸ், 2 ஆயிரம் ஜாவலின் ஏவுகணைகள் அதற்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டாங்கிகளை உக்ரைன் படைகள் வீழ்த்தி உள்ளன. இந்நிலையில், தினமும் 500 ஸ்டிங்கர்ஸ் ஏவுகணைகளை வழங்கினால், ஆப்கானிஸ்தானை போல் உக்ரைனில் இருந்தும் ரஷ்ய படைகளை விரட்டியடிப்போம் என இந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.

Tags : Russia ,Ukraine ,Donbass , Russia switches to noodles 'Option B' over Ukraine retaliation
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...