×

சார்ஜ் போட்டு தூங்கியபோது எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை, மகள் மூச்சுத்திணறி பலி: வேலூரில் பரிதாபம்

வேலூர்: வேலூரில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து சிதறி போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர், மகளுடன் மூச்சுத்திணறி பலியானார். வேலூர் சின்னஅல்லாபுரம் பலராமமுதலி தெருவை சேர்ந்தவர் துரைவர்மா (49). வேலூர் டோல்கேட் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருவதுடன், கேபிள் டிவி தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி இறந்து விட்டார். மகள் மோகனபிரீத்தி (13) திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். மகன் அவினாஷ்(10) தந்தையுடன் இருந்தார். மோகனபிரீத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்புதான், தந்தையை பார்க்க வேலூர் வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மகள், மகனுடன் சாப்பிட்டுவிட்டு, வீட்டு முற்றத்தில் நிறுத்தியிருந்த எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உள்ள சிறிய இடத்தில் மகள் மோகனபிரீத்தியுடன் கட்டிலில் தூங்கியுள்ளார். மகன் அவினாஷ், 2 வீடுகள் தள்ளி வசித்து வரும் அத்தை வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளான். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் துரைவர்மா வீட்டில் இருந்து ரசாயன வாடையுடன் புகை வந்ததை பார்த்து அப்பகுதியினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு எலக்ட்ரிக் பைக்கும், அருகில் இருந்த பெட்ரோல் பைக்கும் பற்றி எரிந்திருந்தது.

தகவலறிந்து போலீசார் வந்து பார்த்தபோது, இரவில் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக சுவிட்ச்சை போட்டுவிட்டு தூங்கிய நிலையில் இ-பைக்கின் பேட்டரி முழுஅளவில் சார்ஜ் ஆனதும் வெடித்து தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது. இதனருகே நிறுத்தியிருந்த பெட்ரோல் பைக்கும் தீப்பிடித்து அந்த வண்டியும் எரிந்துள்ளது. தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் உள்ளே சென்று பார்த்தபோது குளியலறையில் அமர்ந்த நிலையில் துரைவர்மாவும், அவரது மடியில் சாய்ந்த நிலையில் மகள் மோகனப்பிரியாவும் உடல் முழுவதும் கருமையான தூசி படிந்த நிலையில் மூச்சுத்திணறி இறந்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் இருந்து வெளியான ரசாயன புகை குறுகலான ஜன்னல் இல்லாத ஒரே அறையும் முற்றமும் கொண்ட இடத்தில் சூழ்ந்துள்ளது. நெடியுடன் கூடிய புகையால் விழித்துக் கொண்ட துரைவர்மா மகளை அழைத்துக் கொண்டு குளியலறையில் உயிர் தப்பிக்க நுழைந்தபோது, ரசாயனபுகையால் மூச்சுத்திணறி தந்தையும் மகளும் இறந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

* பெட்ரோல் விலை உயர்வுக்கு பயந்து இ -பைக் வாங்கிய 3 நாளில் விபரீதம்
ஸ்டூடியோ நடத்திவரும் துரைவர்மா, பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் பேட்டரி ைபக் வாங்கினால் தான் சமாளிக்க முடியும் என  நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் இ-பைக்கை வாங்கியுள்ளார். 2 நாள் இ-பைக் ஓட்டிய நிலையில் நேற்று முன்தினம் இரவு சார்ஜ் போட்டுள்ளார். இரவு முழுவதும் அதிகளவில் சார்ஜ் ஆனதில் வெடித்து தீப்பிடித்துள்ளது. அதிகம் சூடானால் தீப்பிடிக்கும்: வேலூரில் பைக், கார் பேட்டரி விற்பனையாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தை தற்போது சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கு பெட்ரோல் விலை உயர்வையே காரணமாக கூற முடியும். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இறங்கியிருக்கின்றன.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து  எரியும் சம்பவங்கள் 3.5 சதவீதமாக உள்ளது. இங்கும் சமீபத்தில் கோவை, சென்னை  என பல இடங்களில் எெலக்ட்ரிக் பைக் தீயில் எரிந்துள்ளன. பொதுவாக எலக்ட்ரிக் பைக்குகளில் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அதிக சூடாகும்போதோ அல்லது அளவுக்கு அதிகமான சார்ஜ் ஆகும்போதோ தீப்பிடிக்கின்றன. யுபிஎஸ் சாதனங்களில் யுஆர்எல் பேட்டரிகள் பயன்பாடு உள்ளது. இது ஈயத்தை கொண்டுள்ளது. அதேநேரத்தில் அட்வான்ஸ்டு பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் இணைந்துள்ளது. முழுமையாக சார்ஜ் ஆன பின்னர் தானாகவே சார்ஜ் ஆவது நின்று விடும். இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களை இ-பைக்குகளில் செய்திருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்’’ என்றார்.

Tags : Velore , Father and daughter suffocate to death after electric bike battery explodes while charging: Vellore
× RELATED வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹2 கோடி வர்த்தகம்