×

பைக் ரேசில் ஈடுபட்டபோது விபரீதம் டூவீலர் தீப்பிடித்து 2 துண்டானது: வாலிபர் கருகி பலி: நெல்லை அருகே அதிகாலை சோகம்

நாங்குநேரி: நெல்லை - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை பைக் ரேசில் ஈடுபட்டபோது பைக் தீப்பிடித்ததில் வாலிபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். பைக் இரண்டு துண்டானது. தமிழகத்தில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. சென்னை மெரினாவில் அடிக்கடி பைக் ரேஸ் நடப்பது வழக்கம். இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதோடு, பாதசாரிகளும் மிகுந்த பீதிக்குள்ளாகும் நிலை உள்ளது. பைக் ரேசில் ஈடுபடுபவர்களை காவல்துறையினரும் அவ்வப்போது கைது செய்து நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆனாலும், இந்த மரண விளையாட்டை இளைஞர்கள் விடுவதாக இல்லை.  பைக் ரேசின்போது சாகசத்தில் ஈடுபட்டு சிலர் மரணத்தை பரிசாக பெறும் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நெல்லை - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
அதன் விவரம் வருமாறு: நெல்லை-நாகர்கோவில் நான்குவழிச்சாலையில் அதிகாலை நேரத்தில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். அசுர வேகம், இரைச்சலான சப்தம், சுற்றுவட்டார பகுதியில் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு எதிரொலிக்கிறது. மேலும் அதிவேகமாக செல்வதால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இந்நிலையில், குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த செபஸ்டியான் மகன் உதய்(25) உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் இன்று அதிகாலை 4 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து நெல்லை சிவந்திபட்டி மலைவரை சுமார் 80 கிலோ மீட்டர் சென்று பின்னர் மீண்டும் நாகர்கோவில் செல்லும் வகையில் பைக் ரேஸை தொடங்கினர்.
நாகர்கோவிலிலிருந்து மின்னல் வேகத்தில் பயணத்தை தொடங்கிய நிலையில் இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் நான்குவழிச்சாலையில் சென்றபோது உதய் ஓட்டிவந்த பைக், திடீரென சாலையில் கவிழ்ந்து இரண்டு துண்டாக பிளந்தது. மேலும் நீண்டநேரம் வேகமாக வந்த நிலையில் பைக் வெப்பம் காரணமாக தீப்பிடித்தது. இதில் படுகாயம் அடைந்த உதய் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பைக் ரேசில் பங்கேற்ற மற்ற இளைஞர்கள், அவர்களை காரில் பின்தொடர்ந்து வந்த கண்காணிப்பு குழுவினர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் விரைந்து வந்து, உதய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பைக் ரேசில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். தொடர் விபத்து மற்றும் உயிரிழப்பை தவிர்க்க நான்குவழிச்சாலையில் பைக் ரேசை போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Bike Race, Disaster, Two Wheeler, Fire, Volleyball, Kills
× RELATED நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல்...