×

நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு கிடைக்கும்: அமைச்சர் சக்கரபாணி உறுதி

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ‘மனிதநேய திருநாள்’ என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அவற்றில் 57வது நிகழ்ச்சியாக ‘காலத்தை வெல்வது கல்வி, கற்றிட செய்வோம் உதவி’ என்ற தலைப்பில் வட்ட செயலாளர் சந்தியாகு தலைமையில், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடந்தது.

விழாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கி பேசியதாவது: திமுக ஆட்சியில் சரித்திர சாதனைகள் பல நடந்தேறி வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலைய துறையில் இதுவரை எந்த அமைச்சரும் செய்யாத செயல்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். இந்து சமய அறநிலைய துறை சார்பில் கோயில் திருப்பணிகள் மட்டுமல்லாது, கல்வி பணியிலும் தனது பங்கினை முன்னெடுத்துள்ளது பாராட்டுக்குரியயது. 2021-22ம் நிதியாண்டில் 10 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தற்போது நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 208 வாக்குறுதிகளை பட்டியலிட்டு காட்டியுள்ளார். வரும் காலங்களில் அவரது நிர்வாக திறமையால் இந்தியாவிலேயே தமிழகம் நம்பர் 1 மாநிலமாக நிச்சயம் உருவெடுக்கும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினை ரத்து செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றனர். கடந்த முறை ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, தாலிக்கு தங்கம் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அதை முறையாக செயல்படுத்தவில்லை. அந்த திட்டத்தின் பலன் பயனாளிகளை சென்றடையவில்லை. அதனால்தான் அந்த திட்டத்தை சீர்திருத்தி அரசு கல்லூரிகளில் பயிலும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற உன்னதமான திட்டத்தினை முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டி அழகு பார்த்ததும் முதல்வரின் நடுநிலையான ஆட்சிக்கு சான்றாகும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற முதல்வர் தொடர் முயற்சித்து வருகிறார். நிச்சயம் விரைவில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி மற்றும் கவுன்சிலர்கள் ஆசாத், பரிமளம், ராமுலு, நவீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : NET ,Minister ,Sakarabani , Definite exemption from NEET exam: Minister Chakrabarty confirmed
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள கொசு...