×

2 நாள் அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து சதுப்பேரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் அகற்றம்-போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

வேலூர் :  சதுப்பேரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து நேற்றும் ஈடுபட்டனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து அப்பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதில் வேலூர் மாநகரின் பிரதான நிலத்தடி நீராதாரமாக விளங்கும் சதுப்பேரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக சதுப்பேரியின் நீர்பிடிப்பு பகுதி, அதன் நீர்வரத்து கால்வாய், பாசன கால்வாய், உபரிநீர் வெளியேறும் கால்வாய்கள் என அனைத்தும் முழுமையாக சர்வே செய்யப்பட்டன. இதில் சதுப்பேரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் 110 அடி அகலம் கொண்ட கால்வாய் 25 அடி கால்வாயாக சுருங்கியிருந்தது தெரியவந்தது. இக்கால்வாயை 150க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமித்து குடியிருப்புகளையும், கூடுதல் கட்டிடங்களையும் கட்டியுள்ளனர். இதில் 30 பேர் முழுமையாக வீடுகளாகவே கட்டி வசித்து வருகின்றனர். இதையடுத்து சதுப்பேரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள 150 ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கடந்த 21 நாட்களுக்கு முன்பு முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். ேநாட்டீஸ் வழங்கியும் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்பேரில், வேலூர் தாசில்தார் செந்தில் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கடந்த 23ம் தேதி ஜேசிபி இயந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டன.  தொடர்ந்து, 2வது நாளாக நேற்று முன்தினமும் 2 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. ஆனால் அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்ய தங்களுக்கு 2 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு கால அவகாசம் வழங்கினர். மாற்று இடம் வழங்குவதற்காக சேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார் செந்தில், பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு உதவி பொறியாளர் அம்பரீஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, நேற்று மீண்டும் சதுப்பேரி கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினர்.

அப்போது, சிலர் தங்களுக்கு மேலும் 2 நாள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த அதிகாரிகள் 2 மணி நேரம் மட்டும் தருகிறோம், அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். இதையடுத்து, 2 மணிநேர இடைவெளிக்கு பிறகு அதிரடியாக அனைத்து ஆக்கிரமிப்புகளையும் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

Tags : Square Canal , Vellore: Authorities remove buildings occupying the Satuperi overflow canal.
× RELATED மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு...