×

சவுதி எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சிப்படையினர் அட்டூழியம்

ஜெட்டா: சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஆலை கிடங்கில் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியதால், தீ கொழுந்துவிட்டு எரிகிறது. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போராடி  வருகின்றனர். ஏமன் அரசுக்கு சவுதி ஆதரவு தந்து வரும் நிலையில் அந்நாட்டின்  மீதும் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹவுதி  கிளர்ச்சிப்படையினருக்கு ஈரான் ஆதரவாக இருந்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் ஜெட்டாவில் உள்ள அரசின் அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் கிடங்கு மீது நேற்று ஹவுதி கிளர்ச்சிப் படையினர் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். எண்ணெய் கிடங்குகள் மீது ஏவுகணைகள் வந்து விழுந்ததால், இரு கொள்கலன்கள் பயங்கரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில்  வெளியாகி உள்ளது.
 
உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான அரம்கோ  செங்கடல் நகரில் பல சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்தத்  தாக்குதலில் யாராவது உயிரிழந்துள்ளனரா அல்லது காயமடைந்துள்ளனரா என்பது  குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி  கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இதுதொடர்பாக ஈரான் ஆதரவு ஹவுதி  கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் ட்ரோன்கள் மற்றும்  பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் பல தாக்குதல்களை நடத்தினோம். ஜெட்டாவில் அரம்கோ  நிறுவல் மற்றும் ரியாத்தில் முக்கிய நிறுவனங்களைக் குறி வைத்துத்  தாக்குதல் நடத்தி உள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தின் 2ஆவது கட்டம் இன்று நடைபெற உள்ள இடத்தின் அருகேயே இத்தாக்குதல் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Saudi , Saudi oil, warehouse, missile attack
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!