×

விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 45 நாட்கள் 105 ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு-3 மாவட்டங்களில் 12,543 ஏக்கர் பாசனம் பெறும்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள 105 ஏரிகளுக்கு மட்டும் சாத்தனூர் அணையில் இருந்து 45 நாட்கள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு இறுதியில் சராசரியைவிட அதிகமாக பெய்தது. ஆனாலும், சாத்தனூர் அணையின் 20 அடி உயரமுள்ள நீர் ேபாக்கி மதகுகள் சீரமைக்கும் பணி நடைபெறுவதால், அணையின் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்ப முடியவில்லை. அதிகபட்சம் 99 அடி மட்டுமே தண்ணீர் தேக்க முடிந்தது.

சாத்தனூர் அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 119 அடி. நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. ஆனால், தற்போது அணை 97.80 அடி மட்டுமே நிரம்பியிருக்கிறது. கொள்ளளவு 3,441 மில்லியன் கன அடியாக உள்ளது. எனவே, சாத்தனூர் அணையில் இருந்து நேரடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சாத்தனூர் அணை நீர்பாசனத்தை பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளின் கருத்துக்கேட்பு கூட்டம், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நடந்தது.அதில், பொதுப்பணித்துறை (நீர்வளம்) கண்காணிப்பு பொறியாளர் சாம்ராஜ், செயற் பொறியாளர் (விழுப்புரம்) ராஜேந்திரன், தென்பெண்ணையாறு உபகோட்ட உதவி செயற் பொறியாளர் அறிவழகன், பாசன சங்க தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது: சாத்தனூர் அணையில் தற்போது 3,441 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதில், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பரப்புக்கு வழங்க வேண்டிய உரிமை நீர் 800 மி.க.அடி ஆகும். மேலும், சாத்தனூர் அணை குடியிருப்புகளுக்கான குடிநீர், பூங்கா பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 307.42 மி.க.அடி நீர் தேவைப்படுகிறது.

அதேபோல், நீர் இழப்பு 344.10 மி.க.அடி, திருவண்ணாமலை, தானிப்பாடி, சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் புதுப்பாளையம் நகராட்சி மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு 11 மாதங்களுக்கு 322.24 மி.க. அடி நீர் இருப்பு வைக்க வேண்டும். மேலும், மண் தூர்வினால் தோராய நீர் இழப்பு 500 மி.க.அடி என கணக்கிடப்பட்டுள்ளது.எனவே, இதுபோன்ற தேவைகளுக்கு நீரை இருப்பு வைப்பது போக, மீதமுள்ள நீரை மட்டுமே விவசாய பாசனத்துக்கு திறந்துவிட வேண்டிய நிலை உள்ளது.

எனவே, சாத்தனூர் வலதுபுறக் கால்வாய் வழியாக வினாடிக்கு 622.80 மி.க.அடியும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 544.32 மி.க.அடியும் தொடர்ந்து 45 நாட்களுக்கு திறக்க வாய்ப்பு உள்ளது.அதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 56 ஏரிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு மூலம் 15 ஏரிகள் உள்பட மொத்தம் 105 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.

மேலும், இரண்டு மாவட்டங்களிலும் 12,543 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து, இந்த மாத இறுதியில் தண்ணீர் திறக்க வேண்டும், கடைமடை பகுதி வரை உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் தண்ணீர் திறப்பது அவசியம் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும், தண்ணீர் திறப்பதை தாமதித்தால், சாகுபடி பாதிக்கும் எனவும், நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.எனவே, விவசாயிகளின் கோரிக்கையை இம்மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்து, உரிய உத்தரவு பெற்று நடவடிக்கை எடுப்பதாக டிஆர்ஒ பிரியதர்ஷினி உறுதியளித்தார்.

Tags : Sathanur Dam , Thiruvannamalai: Only 105 lakes in 3 districts including Thiruvannamalai get water from Sathanur Dam for 45 days
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை...