ஜோலார்பேட்டை அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சிக்கு உட்பட்ட சில்கூர்  ஏரி உள்ளது. பல வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பிய நிலையில் துறை அதிகாரிகள் மூலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒவ்வொரு கிராம ஊராட்சியில் உள்ள ஏரிகளில் மீன் குஞ்சுகளை விட்டு வந்தனர்.  இந்நிலையில் அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்றம் சார்பாக விரைவில் ஏரியில் வளர்ந்த மீன்களை பொது மக்கள் குத்தகை மூலம் ஏலம் எடுக்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென்று நேற்று காலை சில்கூர் ஏரியில் 200 கிலோவுக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் ஏரியில் மிதந்து கிடந்த மீன்களை கண்டு ஜோலார்பேட்டை போலீசாருக்கு புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சில்கூர் ஏரியில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து கிடப்பது சமூக விரோதிகளின் செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: