×

பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் குண்டும், குழியுமான காட்டாற்று பாலத்தை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

பேராவூரணி : பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் குண்டும், குழியுமாக ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி நகரம் மூன்று புறமும் காட்டாறுகளால் சூழப்பட்டுள்ளது. அறந்தாங்கி சாலையில் சித்தாதிக்காடு தரைப்பாலம், சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை செல்லும், பூக்கொல்லை காட்டாற்று பாலம், பட்டுக்கோட்டை சாலையில், செல்வவிநாயகபுரம் காட்டாற்று பாலம் என மூன்று பகுதியிலும் காட்டாறுகள் உள்ளது. புதுக்கோட்டை சாலை மட்டுமே ஆறுகள் குறுக்கிடாமல் உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே பெரு மழைக்காலங்களில் மூன்று புறமும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, புதுக்கோட்டை சாலை வழியாகவே நகருக்குள் போக்குவரத்து நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மூன்று பாலங்களும் கட்டப்பட்டு சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பழுதடைந்த 3 பாலங்களையும் இடித்து விட்டு, போக்குவரத்து தடைபடாமல் உயரமான பாலமாக அமைத்து தர வேண்டும் என பேராவூரணி பகுதி பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு பெய்த பெருமழையால் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செல்வவிநாயகபுரம் காட்டாற்று பாலத்தில் உயரத்தை கடந்து தண்ணீர் ஓடியது. மேலும், பாலத்தின் ஒருபகுதியில் வெடிப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர். புதிய பாலம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அதிகாரிகள் உறுதியளித்தனர்.

சுமார் 100 மீட்டர் நீளம் உள்ள இப்பாலத்தில், அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை பல இடங்களில் குண்டுங்குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது.இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் செல்லும்போது பேருந்துகள் கடந்து சென்றால் தடுமாறி பேருந்துக்குள் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிய பாலம் கட்டப்படும் வரை தற்காலிக ஏற்பாடாக பாலத்தில் உள்ள தார்ச்சாலையை மேடு பள்ளமில்லாமல் சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Peravurani-Pattukottai road , Peravurani: The bridge on the Peravurani-Pattukottai road, which was in a dangerous condition due to a bomb blast, needs to be repaired.
× RELATED தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம்...