கண்டிதம்பேட்டை ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்-கால்நடை துறை ஆணையர் அலுவலக உதவி இயக்குனர் திடீர் ஆய்வு

மன்னார்குடி : மன்னார்குடி அடுத்த கண்டிதம்பேட்டை ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை சென்னை கால்நடை துறை ஆணையர் அலுவலகத்தின் உதவி இயக்குனர் ராஜாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கால் நடை வளர்ப்போரிடம் குறைகளை கேட்டறிந்தார்.கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோயாகும். இந்நோய் ஒரு வகையான வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக் கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக் கூடியது.

இந்நிலையில், கால்நடைகளில் (பசுவினம் மற்றும் எருமையினம்) ஏற்படும் கால் மற்றும் வாய் நோயைக் கட்டுப்படுத்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் டாக்டர் தனபால் அறிவுறுத்தலின் பேரில் தேசிய கால் நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மன்னார்குடி கோட்டத்தில் மாடுகளுக்கு 2வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் மார்ச் 8ம்தேதி முதல் தினம் தோறும் ஊராட்சிகள் வாரியாக நடந்து வருகிறது.

மன்னார்குடி கோட்டத்திற்குட்பட்ட நீடாமங்கலம், கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள சுமார் 1.15 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணிகளுக்காக சுமார் 150க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை கால்நடை துறை ஆணையர் அலுவலகத்தின் உதவி இயக்குனர் ராஜாராமன் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சுவாமிநாதன், கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் உள்ளிக்கோட்டையில் உள்ள கால்நடை மருந்தகத்தில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கண்டிதம்பேட் டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன் முன்னிலையில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கால்நடை வளர்ப்போரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இம்முகாமில், டாக்டர் கார்த்திக் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள் குருநாதன், ராணி எலிசபெத், உதவியாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்‘கிய மருத்துவக்குழுவினர் 450 கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசிகளை செலுத்தினர்.

Related Stories: