×

அதியமான்கோட்டையில் சாலையோரம் வீணாகும் பழமையான நடுகற்கள்-பாதுகாக்க கோரிக்கை

தர்மபுரி : அதியமான்கோட்டை அருகே சாலையோரம் சிதிலமடைந்து காணப்படும் நடுகற்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் அறம் கிருஷ்ணன் கூறியதாவது: தர்மபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாகலஅள்ளி கிராமத்தில், சென்றாய பெருமாள் கோயில் அருகில் ஐந்து நடுகற்கள் காணப்படுகின்றன. இவை 14, 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளை சேர்ந்தவையாக இருக்க வாய்ப்புள்ளது. முதல் நடுகல்லில் ஒற்றை போர்வீரன், வலது கையில் உயர்த்தி பிடித்த வாள் மற்றும் இடது கை கீழ் நோக்கியும் காணப்படுகிறது.

 இடையில் குறுவாளுடன் நின்ற நிலையில் உள்ளது. இரண்டாவது நடுக்கல்லில் போர் வீரனின் வலது கரத்தில் உயர்த்தி பிடித்த வாளும், இடது கரம் கேடயத்தை பிடித்த நிலையும் உள்ளது.
இடையில் குறுவாள், கழுத்தில் அணிகலன்கள் மற்றும் காதில் குண்டலம், அருகில் போர் வீரனின் மனைவி மற்றும் ஒரு குழந்தையின் சிற்பமும் உள்ளது. மூன்றாவது நடுக்கல்லில் வீரனின் வலது கரத்தில் கத்தியும், இடது புறம் எருதும்(காளை மாடு) செதுக்கப்பட்டுள்ளது. நான்காவது நடுகல் பன்றி குத்தபட்டான் நடுகல்லாகும். உணவு தானியங்களை வன விலங்குகளிடமிருந்து காப்பாற்றும்போது ஏற்படும் சண்டையில், இந்த வீரன் இறந்திருக்க வேண்டும்.

இறந்து போன அந்த வீரனின் நினைவாக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.ஐந்தாவது நடுகல்லில் போரில் இறந்த வீரனின் வலதுகரத்தில் பெரிய வாளும், இடது கரத்தில் சிறிய வாளும், இடையில் குறுவாளும் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஐந்து நடுகற்களும், சாலையோரத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் உள்ளன. இவற்றை எடுத்துச்சென்று தர்மபுரி அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Adiyamankottai , Dharmapuri: Historic action should be taken to protect the roadside ruins near Adiyamankottai.
× RELATED அதியமான்கோட்டை அருகே சிப்காட் அமைக்க...