விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு நிலுவைத்தொகை வழங்காத சர்க்கரை ஆலைகளை மூட நடவடிக்கை

* குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியர் எச்சரிக்கை

* கூட்டுறவு வங்கியில் கடன் வழங்க ஏற்பாடு

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை வழங்காத சர்க்கரை ஆலைகள் மூடப்படும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்  ஆட்சியர் மோகன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன்  உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய  சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியதாவது:

கிசான் கிரெடிட்  கார்டுக்கு ரூ.1.60 லட்சம்வரை எந்தவித அடமானம், ஜாமீன் இல்லாமல்  கடன்வழங்கலாம் என்ற உத்தரவு உள்ளது. ஆனால், கூட்டுறவு வங்கிகளில் ஜாமீன்  கேட்கிறார்கள். அவர்களுக்கு  மட்டும் தான் கடன் வழங்கப்படுகிறது.  பட்டுவளர்ச்சித்துறை சார்பில், விவசாயிகளை ஓசூர் பயிற்சிமுகாமிற்கு  அழைத்துச்சென்று ஊக்கப்படுத்துவதில்லை. பல கிராமங்களில்  பட்டு

வளர்ச்சிசம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது கிடையாது என்றனர்.  இதற்கு பதிலளித்த ஆட்சியர் மோகன், வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் கூட்டுறவு  வங்கிகளில் கடன்வழங்குவதற்கு தமிழகம்முழுவதும் ஒரேநடைமுறைகளை பின்பற்ற  உத்தரவிடப்பட்டுள்ளது. இனிவரும்காலங்களில் முறையாக கடன்வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும். கொரோனாவுக்கு பிறகு  தற்போது

தான் ஓசூர்பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அழைத்துச்செல்லப்படுவார்கள்.  பட்டுவளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஊக்கப்படுத்தப்படும்

என்றார்.

தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில்,  பொதுப்பணித்துறைக்குச்சொந்தமான ஏரிகளில் தண்ணீர்உள்ளது.  மீன் குத்தகைதாரர்கள் இந்ததண்ணீரை வெளியேற்றவிடாமல்  நடவடிக்கைஎடுக்கவேண்டும். மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள்,  விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை வழங்காமல் பல  மாதங்களாக பாக்கி வைத்துள்ளனர்.

அந்த நிலுவைத்தொகையை உடனே பெற்றுத்தர  நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில்  விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார  வேண்டும். என்றனர். இதற்கு பதிலளித்த  ஆட்சியர் மோகன், குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவைத்தொகை வழங்காத  சர்க்கரைஆலைகள் மூடப்படும் என்றார்.

நிதியுதவி பெற ஆதாரை இணையுங்கள்

கூட்டத்தில்  வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், பிரதம மந்திரியின் நிதி உதவி  திட்டத்தின் கீழ் நிதி உதவித்தொகை பெற வங்கி கணக்கு எண்ணுடன் கட்டாயம்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 23,499 விவசாயிகள் இன்னும்  வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக  இணைக்க வேண்டும். இதனை இணைத்தவர்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்  என்றார்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு அதிகாரிகள் சஸ்பெண்ட்

கூட்டத்தில்  ஆட்சியர் மோகன் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளை  ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள் தாங்களாக முன்வந்து தற்போது செய்துள்ள  இந்த சாகுபடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு,  உயர்நீதிமன்றம், தலைமை செயலாளர் வரை இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். எனவே நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது.  நீர்நிலை  ஆக்கிரமிப்புகளை கருணை இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம் காட்டினாலோ, பாரபட்சமாக நடந்துகொண்டாலோ  தாசில்தார்கள் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வரை சஸ்பெண்ட்  செய்யப்படுவர் என்று எச்சரித்தார்.

Related Stories: