×

சேலத்தில் இருந்து மேற்குவங்கத்துக்கு ரயிலில் சென்ற 20 பசுமாடுகள்: ரூ3 லட்சம் கட்டணம் வசூல்

சேலம்: சேலம் ரயில்ேவ ஸ்டேஷனில் இருந்து மேற்குவங்கத்திற்கு சிறப்பு ரயிலில் 20 பசு மாடுகளை அனுப்பி வைத்தனர். இதன்மூலம் சேலம் கோட்டத்திற்கு ரூ3.19 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சரக்குகள் கையாள்வதை அதிகரிக்க கோட்ட வணிக மேம்பாட்டுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர், விவசாய விளை பொருட்கள் மற்றும் விதைகள், பால் உள்ளிட்ட உணவு பொருட்கள், டிராக்டர், கதிர்அறுக்கும் இயந்திரங்கள், ரிக் வண்டிகளை சிறப்பு பார்சல் ரயில்கள் மூலம் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், புதிய முயற்சியாக கால்நடைகளை சிறப்பு ரயிலில் அனுப்ப கோட்ட வணிக பிரிவு அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர். முதல் முயற்சியாக 20 பசுமாடுகளை மேற்குவங்கத்திற்கு அனுப்ப சேலத்தை சேர்ந்த ஒரு வியாபாரி முன்வந்தார். அதன்படி நேற்று முன்தினம், சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 20 பசுமாடுகளை மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பு பார்சல் வேனில், அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி பசுக்களை ஏற்றினர். பசுவிற்காக வைக்கோல், தவுடு உள்ளிட்ட உணவையும் ஏற்றினர்.

ரயில் செல்லும்போது, அங்குமிங்கும் நகர்ந்து காயம் ஏற்படாத வகையில் இருக்க அந்த பார்சல் பெட்டியில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மாடுகளை கட்டிப்போட்டு, குறுக்கு கம்பிகளும் கட்டப்பட்டன. பிறகு, மேற்குவங்கம் சென்ற ரயிலில், அந்த சிறப்பு எல்எச்பி பெட்டியை இணைத்து, 20 பசு மாடுகளையும் அனுப்பி வைத்தனர். வழக்கமாக வட மாநிலங்களில், ராணுவ குதிரைகளையும், கால்நடைகளையும் சிறப்பு பார்சல் ரயில்களில் அனுப்பி வைக்கின்றனர். சேலம் கோட்டத்தில் இருந்து முதன்முறையாக பசுமாடுகள் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையின் மூலம் சேலம் கோட்டத்திற்கு ரூ3,19,245 வருவாய் கிடைத்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் அதிகளவு கால்நடை போக்குவரத்தை ரயில்கள் மூலம் மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்ய இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Salem ,West , 20 cows taken by train from Salem to West Bengal: Rs 3 lakh collected
× RELATED மைத்துனரின் கட்டை விரலை கடித்தவர் கைது