மெட்ரோ ரயில் பணிக்காக போரூர்-குமணன்சாவடி இடையே போக்குவரத்து மாற்றம் நீட்டிப்பு: போலீசார் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக போரூர் - குமணன்சாவடி இடையே தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து மாற்றம், மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆவடி மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப்பணி காரணமாக, போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பில் இருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை கடந்த மாதம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, இலகு ரக வாகனங்களான கார், ஜீப், ஆட்டோ, பைக் செல்வதற்கும், கனரக வாகனங்களான வேன், டிரக், பஸ் மற்றும் வணிக வாகனங்கள் மாற்று வழியில் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.போரூரில் இருந்து  பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட், பைபாஸ் சந்திப்பு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, சவீதா பல் மருத்துவமனை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படுகிறது.

சென்னை, பூந்தமல்லி, மாங்காடு, சவீதா பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவமனை, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடதுபுறம் திரும்பி சமயபுரம் வழியாக போரூர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.தற்போது இந்த போக்குவரத்து மாற்றம், மார்ச் 25 முதல், மே மாதம் 19ம் தேதி  வரை 2 மாதங்களுக்கு, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் துணை ஆணையாளர் ஆவடி போக்குவரத்து அவர்களின் இணையதள முகவரியான dcpavadi.traffic@gmail.com  மற்றும் கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான sundramoorthyb@kecrpq.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.

மேலும் காவல் உதவி ஆணையாளர் ஆவடி போக்குவரத்து கைப்பேசி எண்.8056217958 மற்றும் காவல் ஆய்வாளர் போரூர் எஸ்.ஆர்.எம்.சி. போக்குவரத்து கைப்பேசி எண். 9498141613 மற்றும் ஆவடி போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண். 7305715666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை ஆவடி காவல் ஆணையரகத்தின் டிவிட்டர் பக்கம் twitter.com/avadipolice என்ற முகவரிக்கு அனுப்பலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: