×

2022-2023ம் ஆண்டு பட்ஜெட் கூட்டம் முடிந்துள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்துள்ள நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 6ம் தேதி முதல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் கடந்த 18ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 19ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை விவாதம் நடைபெற்றது. கடந்த 6 நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று அறிவித்தார்.இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சட்டப்பேரவை கூட்டத்தொடர், மீண்டும் வருகிற ஏப்ரல் 6ம் தேதி தமிழக  சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூடும். அப்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும். எந்தெந்த மானிய கோரிக்கைகள் எந்தெந்த நாட்களில் எடுத்து விவாதிக்கலாம் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்கும்.

இதற்காக, வருகிற 30ம் தேதி (புதன்) காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில், தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஏப்ரல் 6ம் தேதி முதல் நடைபெறும் மானிய கோரிக்கைகள்
எந்தெந்த தேதியில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் எடுத்துக் கொண்டு, எத்தனை நாட்கள் நடத்துவது என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யும். சட்டப்பேரவை கூடும் நாட்களில் காலை 10 மணிக்கு முதலில் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். எதிர்க்கட்சி துணை தலைவர் பட்ஜெட் விவாதத்தில் நேற்று முன்தினம் பேசும்போது, என்னை பேச விடுங்கள். அடுத்த நாள் நிதி அமைச்சர் பதில் சொல்ல வரும்போது எல்லா விஷயங்களையும் பேசட்டும் என்றுதான் சொன்னார். அந்த அடிப்படையில்தான் முதல்வரும், அதை ஏற்றுக்கொண்டு பதிலுரை சொல்லலாம் என்றார்.

அதன்பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் எதிர்க்கட்சி துணை தலைவர் பேசினார். கடைசியில் ஒரு சில நிமிடங்களுக்கு முன், ஒரு முக்கிய பணியின் நிமித்தம் நிதி அமைச்சர் வெளியே போகும் நிலை ஏற்பட்டது. என்னிடம் சொல்லி விட்டுதான் வெளியே சென்றார். அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்பு. முதல்வர் உள்ளிட்ட எல்லா அமைச்சர்களுக்கு அதில் பொறுப்பு உள்ளது. ஒரு அமைச்சர் பணியின் நிமித்தம் வெளியே போனால் முதல்வர், மற்ற அமைச்சர்கள் அங்கு இருக்கும்போது அதில் குறை சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. அந்த ஒரு காரணத்தை கூறி அதிமுக வெளிநடப்பு செய்திருக்க வேண்டாம் என்பதே எனது கருத்து.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்கள் ஜனாதிபதி, கவர்னரிடம் உள்ளதாக நிதி அமைச்சர் பேரவையில் கூறினார். சட்டமன்றத்தில் எந்த பில் வந்தாலும், அதை அனுப்புவதுதான் சபாநாயகர் வேலை. மற்ற பிரச்னைகளை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பார்த்துக் கொள்வார்கள். மேலும், ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அடிக்கடி நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் நிதி அமைச்சர் கூறினார். இது குறித்து அனைத்துக்கட்சிகளும் பேச முடிவு செய்து அறிவித்தால், அதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை முதல்வர் ரசிக்க மாட்டார்
ஓமந்தூரார் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட இடத்தில் சட்டப்பேரவையை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று சில  உறுப்பினர்கள் பேசி இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்கள்.. உங்களுக்கே தெரியும். முதல்வர் எந்த விஷயத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றோ அல்லது ஒரு பிரச்னையை எடுத்து வீம்பாக அதில் செயல்பட வேண்டும் என்பதோ அவருடைய நோக்கம் அல்ல. ஆரோக்கியமாக, ஜனநாயக முறையில் இந்த சட்டமன்றத்தின் மூலம் என்ன தேவையோ அதை மட்டும் பேசுங்கள் என்றுதான் முதல்வர் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், ஏற்கனவே மறைந்த முதல்வர் கலைஞர்  ஆட்சியில் கட்டப்பட்டு, அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறக்கப்பட்ட சட்டமன்ற பேரவைக்கான அந்த இடத்தை, உயர் சிறப்பு மருத்துவமனையாக  மாற்றப்பட்டது. பின்னர் தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில்தான்  மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இன்றைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியும்  சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தினர். திமுக ஆட்சி காலத்தில் கட்டின  கட்டிடத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தவிடாமல் இங்கு வந்ததால், அங்கு (புதிய சட்டமன்ற வளாகம்) சென்றுவிட வேண்டும் என்ற அந்த எண்ணமும் முதல்வருக்கு இருக்காது. எதை செய்தாலும் தீர ஆராய்ந்து தேவையான அளவுக்கு  கலந்து ஆலோசித்து சரியான முடிவு எடுக்கும் முதல்வர்தான் நமது முதல்வர் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Speaker ,Appavu , With the end of the 2022-2023 budget meeting Tamil Nadu Legislative Assembly reconvenes on April 6: Speaker Appavu's announcement
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...